தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்துள்ளது.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு பின்னர் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்துள்ளது தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் தாமிர ஆலைகளே வேண்டாம் என்று அமைச்சரவையைகூட்டி கொள்கை முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தீர்மானத்தை நிறைவேற்றிய பின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசு முன்வர வேண்டும். ஆனால், இந்த அரசு ஏனோ அதை விரும்பவில்லை என்றும், தமிழக அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.