கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசின், கடைகள் மற்றும் நிறுவனங்கள் பணி ஒழுங்குமுறை மற்றும் சேவைக்கான நிபந்தனைகள் சட்ட மசோதா இறுதி செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், கடைகள், வங்கிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வாரத்துக்கு 7 நாட்களிலும் 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த மசோதாவை ஒவ்வொரு மாநிலமும் அப்படியே பின்பற்றலாம் அல்லது அந்தந்த மாநிலத்தின் நடைமுறை தேவைகளின்படி மாற்றிக்கொண்டு அமல்படுத்தலாம் என்று வழிவகை செய்யப்பட்டது.
இந்நிலையில், தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக, தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்களை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அனுமதிக்கும் அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
அரசு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதன்படி பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும், நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய வேண்டும், ஓவர் டைமுடன் சேர்த்தால் கூட நாளொன்று பத்தரை மணி நேரம் மட்டுமே வேலைவாங்க வேண்டும் என அரசு கூறியுள்ளது.
பெண் பணியாளர்கள் இரவு 8 மணிக்கு மேல் பணியில் இருக்க கூடாது, இரவு 8 முதல் காலை 6 வரை பணியில் இருக்க பெண்கள் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளிக்க வேண்டும், பெண் பணியாளர்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், பெண்கள் புகாரளிக்க ஏதுவாக கமிட்டி அமைத்து அது செயல்பாட்டில் இருக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.