அமலாக்கத் துறை இந்த வழக்கு குறித்த விசாரணையை நடத்தி வந்தது.
Chennai: பண மோசடி வழக்கில் சிக்கியிருந்த முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணியின் மகனுக்கு, சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
திமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த கோ.சி.மணியின் மகன், மணி அன்பழகன். அவர் 78 கோடி ரூபாய் பணமோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் அன்பழகனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை இந்த வழக்கு குறித்த விசாரணையை நடத்தி வந்தது. சிறைத் தண்டனையுடன் அன்பழகனுக்கு 1 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு இந்தியன் வங்கி கிளையில், சுமார் 90 கோடி ரூபாய் செலுத்தி அன்பழகன் பணமோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. வங்கியில் இருந்த பணத்தை வெளிநாடுகளில் பொருட்கள் இறக்குமதி செய்ய பயன்படுத்தியதாக கூறி அன்பழகன் கே.ஒய்.சி ஆவணங்களைச் சமர்பித்துள்ளார்.
ஆனால், அப்படி எந்தவித இறக்குமதியும் செய்யபடவில்லை என்று தெரியவந்துள்ளது. இதை விசாரணை செய்த அமலாக்கத் துறை அன்பழகனை, 2017 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 7 ஆம் தேதி பணமோசடி தடுப்புச் சட்டத்துக்குக் கீழ் கைது செய்தது. தற்போது அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.