மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது.
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் கொண்டுவரப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குறியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தலைவர்கள், மேயர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அமைச்சரவை நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டது. அப்போது, மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மறைமுக தேர்தல் முறையில் நேரடியாக மக்கள் அல்லாமல் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மேயர், தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் குதிரை பேரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பின.
இந்த சூழலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தலை நடத்த வழி செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேயர், நகராட்சி - பேரூராட்சி, தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் முடிவு கண்டிக்கத்தக்கது. காலையில் மறைமுகத் தேர்தல் இருக்காது என்று ஓ.பி.எஸ். கூறிய நிலையில் மாலையில் அவசரக் சட்டம் பிறப்பித்துள்ளனர். மேயரை மக்கள் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
ஆனால் ஓ.பி.எஸ் கூறியதற்கு மாறாக மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம் பிறப்பிக்கபப்ட்டுள்ளது என தெரிவித்தார். மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது.
திமுக ஆட்சியில் அரசியல் சூழ்நிலை காரணமாக மறைமுகமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தினோம். உள்ளாட்சியில் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதனால் மறைமுகமாக தேர்தல் முறை மாற்றப்பட்டது எனவும் கூறினார்.