This Article is From Mar 11, 2020

போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம்; காரணம் என்ன?

தொழிற்சங்கங்களுடைய முக்கிய கோரிக்கை என்பது, தொழிலாளர்களிடமிருந்து எடுக்கப்பட்ட ரூ 7 ஆயிரம் கோடியை உடனடியாக அரசு திரும்பக் கொடுக்க வேண்டும் என்பதேயாகும்.

போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம்; காரணம் என்ன?

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கக்கோரி சேலம் போக்குவரத்துக்கழக மண்டல தலைமை அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையொட்டி, தொழிலாளர்களோடு 14வது ஊதிய ஒப்பந்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருக்கின்றது. இந்த பேச்சு வார்த்தையில் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கான ஊதியம், அகவிலைப்படி, போன்றவை குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் குறித்து சி.ஐ.டியு தொழிற்சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் சௌந்தர்ராஜன் சில தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

“மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை போக்குவரத்து ஊழியர்களின் சங்கங்களோடு ஒப்பந்தம் போடப்படுவது நடைமுறை வழக்கமாகும். அதன்படி கடந்த செப்டம்பர் மாதத்தோடு மூன்றாண்டுகளுக்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இந்த நிலையில் அடுத்த மூன்றாண்டுகளுக்கான ஒப்பந்தம் குறித்தான பேச்சுவார்த்தை ஆறு மாதக் காலமாகியும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இது தொழிற்சங்கங்களுடைய பிரதான கோரிக்கையாகும். மேலும், கடந்த ஒப்பந்தத்தில் போடப்பட்டு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், உதாரணமாக தொழிலாளர் நல ஆணையம் அளித்த உத்தரவை மீறி தொழிலாளர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் போன்றவற்றினை திரும்பப் பெற வேண்டும் என சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டத்தினை நடத்தி வருகின்றோம்.

இம்மாதிரியான ஒப்பந்த பேச்சுவார்த்தையில் அரசு தரப்பிலிருந்து பங்கேற்கக்கூடியவர்கள் உயர் பொறுப்பில், முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்ல. மாறாக அதற்கு அடுத்தகட்டத்தில் உள்ளவர்களை இந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கச் செய்து, இதில் எவ்வித இறுதி முடிவும் எட்டப்படாமல் பேச்சு வார்த்தையை முடித்துக்கொள்கின்றனர். இந்த போக்கானது மாற வேண்டும். அதோடு பதிவு செய்த, தொழிலாளர்களோடு இணைந்திருக்கின்ற தொழிற் சங்கங்களோடு அரசு பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. ஆனால், இதற்கு நேர்மாறாக, பதிவு செய்யாத அல்லது புதுப்பிக்காத, தொழிலாளர்களோடு தொடர்பில்லாத சங்கங்களைக் கொண்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு முடித்துக்கொள்கின்றது. இந்த நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்.

தொழிற்சங்கங்களுடைய முக்கிய கோரிக்கை என்பது, தொழிலாளர்களிடமிருந்து எடுக்கப்பட்ட ரூ 7 ஆயிரம் கோடியை உடனடியாக அரசு திரும்பக் கொடுக்க வேண்டும் என்பதேயாகும். இவ்வளவு பெரிய அளவிலான பணம் நிலுவையில் இருப்பதால், பல தொழிலாளர்களுக்கு பி.எஃப், நிலுவைத்தொகை, உள்ளிட்டவை சரியான நேரத்தில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு வங்கிகள் தொழிலாளர்களுக்குக் கடன் வழங்குவதிலும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது.

இவற்றுக்கு நிரந்தர தீர்வுகாணவே போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த போராட்டமானது திடீரென நடக்கவில்லை. இருபது நாட்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டுதான் நடைபெறுகின்றது.”

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் போக்குவரத்து ஊழியர்கள் இதே கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈட்டுப்பட்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                                                                        -கார்த்தி.ரா

.