‘மக்களுக்கு நீதிமன்றத்துக்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள உரிமையுண்டு’, உச்ச நீதிமன்றம்
ஹைலைட்ஸ்
- உள்ளே என்ன நடக்கிறது என மக்கள் தெரிந்துகொள்ள உதிமையுள்ளது, நீதிமன்றம்
- தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது
- பாலியல் வழக்குகள் நேரலை செய்யப்படாது என தீர்ப்பு
New Delhi: உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைகளை நேரலை செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ‘மக்களுக்கு நீதிமன்றத்துக்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள உரிமையுண்டு’ என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
‘சூரிய ஒளி தான் சிறந்த கிருமி நாசினி’ என்று தீர்ப்பில் சூசகமான கருத்தை தெரிவித்த உச்ச நீதிமன்றம், ‘வழக்கு விசாரணைகளை நேரலை செய்வதன் மூலம், நீதிமன்ற நடவடிக்கைகளில் ஒரு வெளிப்படைத் தன்மை வரும். ஆனால், அதற்கு முறையான விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். நேரலை செய்தால், அது நீதிமன்ற நிர்வாகத்திலும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும்’ என்று கூறியுள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இது தொடர்பான வழக்கை விசாரித்தது.
இந்த வழக்கு குறித்து பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர். அனைத்து மனுக்களையும் ஒரு வழக்காக எடுத்துக் கொண்டது உச்ச நீதிமன்றம். கடந்த ஜூலை மாதம் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘நீதிமன்ற விவகாரங்களை நேரலை செய்வதன் மூலம் நீதியை இன்னும் உறுதிப்படுத்த முடியும். ஒரு வழக்கின் மனுதாரர்களுக்கு, அவர்களின் வழக்கு எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள உரிமையுள்ளது. மேலும் அவர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர், எப்படி வாதாடுகிறார் என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில், பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நீதிமன்ற விவகாரங்களை நேரலை செய்வதன் மூலம், மாணவர்களுக்கு அது நல்ல படிப்பிணையாக இருக்கும்’ என்றும் கூறியுள்ளது.