7 ரோஹிங்கியாக்களை (Rohingya Muslims) வெளியேற்றுவதைத் தடுக்க முடியாது, உச்ச நீதிமன்றம்
ஹைலைட்ஸ்
- மியான்மர் அவர்களை குடிமக்களாக அங்கீகரிக்கும், மத்திய அரசு வாதம்
- அசாமில் 7 பேரும் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்
- இந்தியாவில் 40,000 ரோஹிங்கியா மக்கள் உள்ளனர்
New Delhi: மியான்மரைச் சேர்ந்த 7 ரோஹிங்கியா முஸ்லீம்களை, நாட்டிலிருந்து வெளியேற்ற இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிராக நேற்று அவசர மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘இது அரசின் கொள்கை முடிவு. இதில் நாங்கள் தலையிட முடியாது’ என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
வெளியேற்றப்பட உள்ள 7 ரோஹிங்கியா முஸ்லீம்களும், 2012 முதல் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக நாட்டுக்குள் நுழைந்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று, மத்திய அரசு, 7 பேரும் மீண்டும் மியான்மருக்கு அனுப்பப்படுவார்கள் என்று சொன்னது. அரசின் முடிவுக்கு எதிராகத் தான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் துஷார் மேத்தார், அரசு சார்பில் ஆஜரானார். அவர், ‘7 ரோஹிங்கியா முஸ்லீம்களையும் மியான்மர் மீண்டும் நாட்டுக்குள் குடிமக்களாக வரவேற்கத் தயார் என்று கூறியுள்ளது. அவர்களுக்கு அங்கு உரிய குடியுரிமை தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதையடுத்துத் தான் உச்ச நீதிமன்றம், ‘இது அரசின் கொள்கை முடிவு. இதில் நாங்கள் தலையிட முடியாது’ என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இந்திய அரசின் இந்த முடிவுக்கு, ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா சபை அதிகாரி டெண்டாயி அக்கூமே, ‘இது சர்வதேச விதிமுறைகள்படி ரோஹிங்கியா மக்களின் உரிமையை மீறும் செயலாகும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மொத்தம் 40,000 ரோஹிங்கியா முஸ்லீம்கள் இருக்கின்றனர். அவர்களில் 16,000 பேர், ஐ.நா அகதிகள் மையத்திடம் தங்களை பதிவு செய்து வைத்துள்ளனர். ரோஹிங்கியா மக்கள் குறித்து இந்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில், ‘அவர்கள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர். தீவிரவாத அமைப்புகளுடனும் ரோஹிங்கியா மக்களுக்கு தொடர்பு இருக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, அவர்களை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.