66(ஏ) சட்டத்தைத் தடை செய்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், ‘அரசியல் சட்ட சாசனத்துக்கு எதிராக இந்தச் சட்டம் இருக்கிறது’ என்று கூறியது.
New Delhi: சமூக வலைதளங்களில் அரசு மற்றும் அரசியல் தலைவர்களை விமர்சிப்பவர்களுக்கு எதிரான 66(ஏ) சட்டப் பிரிவை, உச்ச நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டே தடை செய்தது. ஆனால், இன்னும் அந்தச் சட்டத்துக்குக் கீழ் கைது நடவடிக்கையில் அரசு ஈடுபடுவதாக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசை லெஃப்ட் அண்டு ரைட்டு வாங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் பி.யூ.சி.எல் அமைப்பு தாக்கல் செய்த மனுவில், ‘2015 ஆம் ஆண்டே, 66(ஏ) தொலைத்தொடர்பு சட்டம் அல்லது ஐடி சட்டம், ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால், இன்றளவும் அந்தச் சட்டத்தை அரசு பயன்படுத்தி வருகிறது. இந்த தடை செய்யப்பட்டச் சட்டத்தைப் பயன்படுத்தி தற்போது 22 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிமன்றம், ‘இந்தச் சட்டம் இன்னும் நடைமுறையில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப் போகிறோம். 66(ஏ) சட்டத்தைப் பயன்படுத்த உத்தரவிட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இது குறித்து மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.
66(ஏ) சட்டத்தைத் தடை செய்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், ‘அரசியல் சட்ட சாசனத்துக்கு எதிராக இந்தச் சட்டம் இருக்கிறது' என்று கூறியது. இந்தச் சட்டம் முதன்முறையாக 2000 ஆண்டு அமலானது. ஆனால், 2008 ஆம் ஆண்டுதான் அந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக அந்தச் சட்டம் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டது.