This Article is From Oct 05, 2018

தமிழகத்தில் அக்.8ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்! - வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் அக்.8ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்! - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வரும் அக்டோபர் 8ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்,

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, அடுத்துவரும் இரு தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் தொடர்ந்து புயலாகவும் வலு பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக்கூடும்.

தென் மேற்கு பருவமழை வட இந்திய பகுதிகளிலிருந்து அடுத்து வரும் 3 தினங்களில் படிப்படியாக விலகி, வரும் அக்.8ம் தேதி வடகிழக்கு பருவமழையாக தொடங்குவதற்கான சூழ்நிலை நிலவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ மழையும், செங்கல்பட்டில் 12 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

வரும் அக்டோபேர் மாதம் 8ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றார். மேலும், ரெட் அலா்ட் கொடுக்கப்பட்டாலும் அது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என அவர் கூறியுள்ளார்.

.