சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் பாஜக-வுடன் கூட்டணி வைத்தார் நிதிஷ்.
ஹைலைட்ஸ்
- நிதிஷ் குமார்தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும், குஷ்வாஹா
- நிதிஷ் பதவி விலக நினைக்கிறார், குஷ்வாஹா
- தேஜகூ கூட்டணியில் பிளவு எனத் தகவல்
Patna: பிகார் முதல்வர் நிதிஷ் குமார், முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய விரும்புவதாக கூட்டணி கட்சித் தலைவரான மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா பகீர் கிளப்பும் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
குஷ்வாஹாவின் ஆர்.எல்.எஸ்.பி கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறது. அதே கூட்டணியில் தான் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் இருக்கிறது. இந்நிலையில், பாஜக - ஐஜத இடையில் சில நாட்களுக்கு முன்னர் லோக்சபா தொகுதி பங்கீடு நடந்தது. அதற்கு மற்ற கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குஷ்வாஹாவின் கருத்து கவனம் பெற்றுள்ளது.
பாட்னாவில் தனது கட்சியினர் முன்னிலையில் பேசிய குஷ்வாஹா, ‘பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பல ஆண்டுகளாக பதவியில் இருந்து விட்டதால், அதைத் துறக்க விரும்புவதாக தெரிகிறது. நான் இப்படி கூறுவதால் நிதிஷ் குமாரை பதவி விலகச் சொல்லவில்லை. அவரைப் பற்றி அவருக்குத் தான் நன்றாக தெரியும்' என்று சூசகமான முறையில் பேசியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஐஜத தரப்பு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. பாஜக கூட்டணியில் இருந்த ஐஜத, 2013 ஆம் ஆண்டு வெளியேறியது. அப்போது நிதிஷ் குமார் கூட்டணி முறிவுக்குக் காரணமாக, நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்ததைச் சுட்டிக் காட்டினார். சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் பாஜக-வுடன் கூட்டணி வைத்தார் நிதிஷ்.
இந்நிலையில் கடந்த மாதம் ஒரு கூட்டத்தில் பேசிய குஷ்வாஹா, ‘பிகாரில் இருக்கும் மிக முக்கியத் தலைவர் ஒருவர், மோடியை மீண்டும் பிரதமராகப் பார்க்க விரும்பவில்லை' என்றார். குஷ்வாஹா, அந்தத் தலைவரின் பெயரைக் குறிப்படிவில்லை என்றாலும், அவர் நிதிஷ் குமாரைத் தான் சொல்கிறார் என்று ஆருடம் சொல்லப்பட்டது.
அதே நேரத்தில் குஷ்வாஹா, தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிவிடுவார் என்று எதிர்பார்த்து வருகின்றது ஐஜத தரப்பு. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாது என்றும் சொல்லி விட்டார் குஷ்வாஹா. தற்போது பிகார் அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.