This Article is From Mar 21, 2019

‘இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடந்தால்…’- பாகிஸ்தானை எச்சரிக்கும் அமெரிக்கா!

கடந்த மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வந்தபோது, அமெரிக்க அரசு, இரு நாடுகளிடையேயும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

‘இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடந்தால்…’- பாகிஸ்தானை எச்சரிக்கும் அமெரிக்கா!

அமெரிக்க அரசு தரப்பு பாகிஸ்தானிடம், தீவிரவாதத்துக்கு எதிராக ஸ்திரத்தன்மையுடைய நம்பகமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Washington:

அமெரிக்க அரசு தரப்பு பாகிஸ்தானிடம், தீவிரவாதத்துக்கு எதிராக ஸ்திரத்தன்மையுடைய நம்பகமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் அமெரிக்க தரப்பு, ‘இந்தியா மீது இன்னொரு தீவிரவாத தாக்குதல் நடந்தால், நிலைமை மிகவும் மோசமானதாக மாறும்' என்று எச்சரித்துள்ளது. 

இது குறித்து அமெரிக்க தரப்பு மேலும் கூறுகையில், ‘பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு எதிராக கறாரான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தய்பா அமைப்புகள் மீது அவர்கள் நடவடிக்கை எடுத்தேயாக வேண்டும்.

தற்போது நிலவும் சூழலில் இந்தியா மீது மட்டும் இன்னொரு தீவிரவாத தாக்குதல் நடந்தால், நிலைமை மோசமானதாக மாறும். இரு நாட்டுக்கும் இடையில் பதற்ற சூழல் அதிகரிக்கும்' என்றுள்ளது.

பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க தரப்பு கூறுகையில், ‘தற்போது அது குறித்துப் பேச முடியாது. அது குறித்து விரவான முழுமையான ஆய்வுக்குப் பின்னர்தான் சொல்ல முடியும். பாகிஸ்தான் தரப்பு சில தீவிரவாதக் குழுக்களை முடக்கியுள்ளது. சில தீவிரவாதிகளின் சொத்துகளையும் முடக்கியுள்ளது. அதேபோன்று ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பின் மீதும் சில நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் மிகவும் ஸ்திரத்தன்மையுடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இது சம்பந்தமாக அமெரிக்கா, பல உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது' என்றுள்ளது. 

கடந்த மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வந்தபோது, அமெரிக்க அரசு தரப்பு, இரு நாடுகளிடையேயும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பதற்ற சூழலைத் தணிக்க அமெரிக்கா, அதிக முயற்சி எடுத்ததாக கூறப்படுகிறது. அதேபோல, பல நாடுகளையும் அமெரிக்கா, சுமூக பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியதாக தெரிகிறது. அதில் சீனா, சவுதி அரேபியா, கத்தார், இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்டவை அடங்கும். 

.