நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கைகள் நிறைவு பெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் கடும் தோல்வியை சந்தித்தது.
இதில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உட்பட 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஸ் இளங்கோவன் தோல்வியடைந்தார். இதன் மூலம் திமுக - காங்கிரஸ் கூட்டணி மக்களவை தேர்தலில் அந்த ஒரு தொகுதியை மட்டுமே இழந்துள்ளது.
எனினும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதியில் திமுகவின் சொந்த சின்னமான உதய சூரியன் சின்னத்தில் 23 தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மூலம் திமுக தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறும்போது,
இந்த தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகள் என்பது, மத்தியிலே இருக்கும் அரசு மாறவேண்டும், இந்தி, இந்துத்துவா கொள்கைகளுக்கு மாறாக தமிழகம் இருக்க வேண்டும் என்பதற்காக அளித்த வாக்குகள். தமிழகத்தில் பாஜகவுக்கு என்ற தனிப்பட்ட வாக்குகள் கிடையாது அவை அதிமுகவுக்கு விழுந்த வாக்குகள்.
பாஜகவுக்கு தனிப்பட்ட வாக்குகள் எப்படி இருக்கிறது என்றால், 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தனியாக போட்டியிட்டார்கள் அப்போது என்ன வாக்குகள் பெற்றார்களோ அது தான் பாஜகவின் வாக்குகள் என்று அவர் கூறியுள்ளார்.