தஞ்சாவூரில் சோழர் காலத்து ஆலயமான, பெரிய கோயிலில் ‘விஞ்ஞான பைரவம்' என்ற தியான நிகழ்ச்சி நடைபெற இருந்தது. தனியார் அமைப்பான ‘வாழும் கலை' இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளது. வாழும் கலையின் நிறுவனர் நிகழ்ச்சியில் பங்கேடுத்து, பிரசங்கள் செய்ய இருந்தார்.
இதையடுத்து, பெரிய கோயிலின் புராதனத் தன்மை பாதிக்கும் என்று கூறி பல தமிழ் அமைப்பினர், நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நிகழ்ச்சிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், பிரதீப் குமார் கூறுகையில், ‘விஞ்ஞான பைரவம் நிகழ்ச்சி திட்டமிட்டப்படி இரண்டு நாட்களுக்கு நடக்கும். நிகழ்ச்சிக்கு, பெரிய கோயிலில் இடைக்காலத் தடை இருப்பதால், தனியார் இடத்தில் நடத்தப்படும்' என்று கூறியுள்ளார்.
நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்காதது குறித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ‘கோயிலில் நிகழ்வை நடக்கவிடாமல் தடுத்ததில் நிச்சயமாக உள்நோக்கம் இருக்கிறது. கோயிலில் பஜனை செய்ய விடாதது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம் தான். கோயில் இருப்பதே இதைப் போன்ற விஷயங்களை நடத்துவதற்காகத்தான்.
கோயிலில் எங்கள் நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனைத்து வித அனுமதிகளையும் வாங்கினோம். மக்களே எங்கள் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்று தான் விரும்பினார்கள். இந்துக் கோயிலில், இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு யோகமும், தியானமும், பஜனையும் பண்ணுவதற்க்குத் தடை விதித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.