சிலைகடத்தல் அனைத்து வழக்கையும் சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு கடந்த ஒரு வருடமாக விசாரித்து வருகிறது. இதனிடையே இது தொடர்பான வழக்கு கடந்த 7ஆம் தேதிக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது, சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரியிடம் முறையிட சென்றால், அங்கு விசாரணை அலுவலகம் பூட்டப்பட்டு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதுகுறித்து பொன்.மாணிக்கவேல் தரப்பிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டபோது, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டாளும் தனக்கான அலுவலகம் எதுவும் ஒதுக்கப்படவில்லை, கிண்டியில் வழக்கமாக செயல்படும் அலுவகத்திற்கு சென்றால், அங்கிருக்கும் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் டிஜிபி தனக்கு அலுவலகம் இல்லை என்று கூறிவிட்டார். இதன் மூலம் நாங்கள் அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று குற்றச்சாட்டை வைத்தார்.
இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவை மீறுவதாக தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பொன் மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் இடைநீக்கம் செய்ய நேரிடும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வழக்கை ஜன.9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசு தலைமை வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்டனர். இதற்கு ஓய்வு பெற்ற ஒருவர் காவல்துறை கீழ் உள்ள அதிகாரிகளை எப்படி இடமாற்ற செய்ய முடியும் என நீதிபதிகளிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற ஒருவர் டிஜிபியாக தொடரும்போது சிறப்பு அதிகாரி ஏன் தொடரக்கூடாது எனக் கேள்வி எழுப்பினர். பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டு 50 நாட்களாகியும் இன்னமும் ஏன் அலுவலகம் ஒதுக்கப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சிலைக் கடத்தல் வழக்கு தொடரப்பட்டதில் இருந்து அரசின் செயல்பாடுகள் முறையாக இல்லை எனவும் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை அரசு கையாளும் விதத்தை பார்க்கும்போது தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிக்க வேண்டி வரும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்த வழக்கில் அரசின் நிலைப்பாடும் செயல்பாடும் என்ன என்பதை விளக்க வேண்டும் எனக் கூறி வழக்கை ஜன.21 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.