கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க முடியாத சூழல் நிலவுகிறது: முதல்வர் எடப்பாடி
கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக ஒழிக்க முடியாத சூழல் நிலவுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான மூன்று புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதன் பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக பொருளாதாரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது.
மக்களின் வேண்டுகோளை ஏற்று இ-பாஸ் நடைமுறையை அரசு எளிமையாக்கி உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் இ-பாஸை பயன்படுத்த வேண்டும். மிக மிக அவசியம் என்றால் மட்டும் மக்கள் இ-பாஸ் எடுத்து வெளியூர் செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க முடியாத சூழல் நிலவுகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை வெல்ல முடியும்.
மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றை குறைப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும், வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கொரேனா பரிசோதனை அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு கவனமுடன் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் வெளியில் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.