This Article is From Mar 20, 2019

அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. இதில், படிப்படியாக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து, தொகுதி வேட்பாளர்கள் பெயரையும் அதிமுக அறிவித்துவிட்டது. இதைத்தொடர்ந்து, இந்த தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த துவங்கியுள்ளனர். அந்த வகையில், தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவிந்தரநாத் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் இன்று மகன் ரவிந்தரனாத்துக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை என்று கூறினார்.

இதனிடையே, அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தினால் நான் கூட ரவீந்திரநாத்துக்கு எதிராக தேனி தொகுதியில் நிற்கத் தயார் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

.