This Article is From Jun 21, 2019

மழை இல்லாததால் தண்ணீர் பஞ்சம் என்று சொல்ல ஒரு அரசு தேவையில்லை: துரைமுருகன்

மழை இல்லாததால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று சொல்வதற்கு ஒரு அரசு தேவையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கடுமையாக சாடியுள்ளார்.

மழை இல்லாததால் தண்ணீர் பஞ்சம் என்று சொல்ல ஒரு அரசு தேவையில்லை: துரைமுருகன்

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக குடிநீருக்காக மக்கள் அல்லல் படும் நிலை உருவாகியுள்ளது. தலைநகரான சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டது. நீர் நிலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. ஏரி, ஆறு, வாய்க்கால் என அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால் நீர் ஆதாரம் குறுகிவிட்டது. 

இதனால், சென்னை மெட்ரோ வாட்டர் குழாய்களில் வழங்கும் தண்ணீர் சுமார் 40 சதவீதம் அளவிற்கு நிறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் 525 மில்லியன் லிட்டர் மட்டுமே தற்போது, தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இப்படி, தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சென்னைக்குக் குடிநீர் அளிக்கும் 4 ஏரிகளும் வறண்ட நிலையில் இருக்கின்றன. மழைப் பொழிவு குறைவாக இருந்ததனால்தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஏரிகளில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்த ஏரிகளில் 3 டிஎம்சி தண்ணீர் இருந்தது. 

சென்னைக்கு கல் குவாரிகள், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தால் நீர் வழங்கி வருகிறோம். ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு 65 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார். 

இதனிடையே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியதாவது, தண்ணீர் தருவதாக கேரள அரசு கூறியதை, தமிழக அரசு வரவேற்றிருக்க வேண்டும். கேரள அரசு தருவதற்காக முன்வந்த 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தமிழக அரசு பெற்றுக் கொள்ளாதது ஏன்? தமிழகத்தில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ரயில்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டுவரப்பட்ட வரலாறும் உண்டு. 

மழையில்லாததால் ஏரி, குளங்கள் வறண்டு விட்டன. ஆதலால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என சொல்வதற்கு, ஒரு அரசு தேவையில்லை. ஊடகங்களும், மக்களுமே இதை தான் சொல்கிறார்கள். இதையே திரும்ப சொல்வதற்காகவா தமிழக அரசு உள்ளது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

.