தமிழக அரசின் கடன் 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக உயர்ந்திருப்பது கவலை அளிக்கிறது - டிடிவி தினகரன்
தமிழக கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் பட்ஜெட்டில் இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதுதொடர்பாக சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளிலும் நிதி நிலை அறிக்கைகள் வெறும் அறிவிப்புகளாக இருந்ததைப் போலவே, தங்களின் கடைசி முழு பட்ஜெட்டையும் இந்த ஆட்சியாளர்கள் தாக்கல் செய்துள்ளனர். இதில், தமிழக அரசின் கடன் 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக உயர்ந்திருப்பது கவலை அளிக்கிறது.
பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் திறனற்ற நிர்வாகத்தால் ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனின் தலையிலும் சுமார் 57ஆயிரம் ரூபாய் கடன் சுமை ஏறியிருக்கிறது. 128 பக்கங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இந்தக் கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை.
தமிழக மக்கள் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்று பழனிசாமி அரசு கூறிவரும் நிலையில், வரி விதிப்பில் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வுகளில் வரலாறு காணாத இறக்கம் ஏற்பட்டு தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் தமிழ்நாட்டின் நிதிநிலை சிக்கலாகி இருப்பதாகவும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டில் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக அரசின் கொள்கை விளக்க குறிப்பிலேயே அறிவிக்கப்பட்ட நிலையில், 9 மற்றும் 10ம் வகுப்பு இடைநிற்றலில் நூறு சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு சமீபத்தில் கூறியிருந்தது.
ஆனால், இதையெல்லாம் மொத்தமாக மறைத்துவிட்டு பள்ளிக்கல்விக்கு அதிக அளவில் நிதி (34 ஆயிரத்து 181 கோடி ரூபாய்) ஒதுக்கியிருப்பதாக பட்ஜெட்டில் தங்களுக்குத் தாங்களே பெருமை பொங்கச் சொல்லியிருப்பதைப் பார்த்து வேதனையோடு சிரிக்கத்தான் தோன்றுகிறது.
மத்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் கீழடியில் அகழாய்வு வைப்பகம் அமைப்பதற்கு 12.21 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இதனை உண்மையான அக்கறையோடு ஆட்சியாளர்கள் செயல்படுத்தவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.