This Article is From Jan 04, 2019

திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தடையில்லை: தேர்தல் ஆணையம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தடையில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

Advertisement
Tamil Nadu Posted by

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி, கடந்த ஆக.7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, கலைஞரின் மறைவு குறித்து சட்டப்பேரவை அலுவலகத்துக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் துறைக்கு கலைஞரின் திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் 28ஆம் தேதி அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் வரும் 10ம் தேதி வரை நடக்கயிருக்கிறது.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரணப் பணிகள் முழுமையடையாத நிலையில் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இடைத்தேர்தலையொட்டி திருவாரூரில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

Advertisement

திருவாரூரில் இன்னும் புயல் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. மக்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் தேர்தல் நடைபெற்றால் அரசு நிர்வாகம் தேர்தலில்தான் கவனம் செலுத்தும். மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இதை கருத்தில் கொண்டு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நிவாரண பணிகளில் எந்த அரசியல் தொடர்பும் இருக்க கூடாது, தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 

Advertisement
Advertisement