மின் கட்டண வசூலில் எந்த விதிமீறலும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்
மின் கட்டணம் நிர்ணயிக்கும் முறையில் எந்த விதிமீறலும் இல்லை. விதிகளை பின்பற்றியே கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மின்சார கட்டணம் வசூலிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நடிகர் பிரசன்னா உட்பட ஏராளமானோர் சமூக வலைதளங்களில் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தினர். வழக்கத்திற்கு மாறாக இம்மாதம் மின் கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த மின்கட்டண குழப்பம் குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கட்டணத்தை முறைப்படுத்தும் படி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். ஏற்கனவே மக்கள் ஊரடங்கு சமயத்தில் வருமானம் இழந்து தவித்து வருகின்றனர். இப்படி சூழ்நிலையில் அவர்களுக்கு இன்னும் பாரமாக மின் கட்டண சுமையை அளிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினர். எனினும், அந்த குழப்பம் முடியவில்லை.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மின் பயன்பாட்டை அளவீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்காக முந்தைய மாதத்தில் கட்டிய கட்டணத்தையே பயனர்கள் செலுத்தலாம் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து, அடுத்த இரண்டு மாத த்திற்கு மின் பயன்பாட்டை அளவீடு செய்யும் போது முந்தைய மாத பயன்பாட்டையும் சேர்த்து அளவீடு செய்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், அதன் தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் சவீதா பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், தமிழகம் முழுவதும் 1.75 கோடி மின் இணைப்புக்கள் உள்ளன. இவர்களில் ஒவ்வொருவரும் தங்களது வசதிக்கு ஏற்ப மின் கட்டணத்தை கணக்கிட முடியாது.
வீடுகளில் மின் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள முடியாவிட்டால் முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க விதிகள் உள்ளன. அதன் அடிப்படையிலேயே தற்போது கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இது விதிமீறிய செயல் அல்ல.
மின் கட்டணம் செலுத்த அவ்வப்போதைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதற்கு எந்த அபராதமும் விதிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, அரசுத்தரப்பில் வாதிட அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.