லக்னோவில் காங்கிரஸ் தலைவர்களுடன் பிரியங்கா ஆலோசனை நடத்தியுள்ளார்.
New Delhi: கணவர் ராபர்ட் வதேரா மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் தான் தனது வேலையில் கவனம் செலுத்தி வருவதாகவும் பிரியங்கா காந்தி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் சொத்து வாங்கியது தொடர்பாகவும், லண்டன் வீடுகள் விவகாரம் குறித்தும் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை தினந்தோறும் நீடித்து வருகிறது.
இதற்கிடையே நேரடி அரசியலில் குதித்த பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பேரணி நடத்தி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார். பிரியங்காவுக்கு உத்தர பிரதேசத்தின் கிழக்கு மண்டலத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கீழ் 40 மக்களவை தொகுதிகள் வருகின்றன.
லக்னோவில் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பிரியங்காவிடம் செய்தியாளர்கள் கேள்விகளை கேட்டனர். குறிப்பாக ராபர்ட் வதேராவின் விசாரணை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, ''ராபர்ட் வதேரா மீதான விசாரணை ஓயாமல் தொடர்ந்து நடைபெறும். நான் எனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்'' என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
சோனியா காந்தியின் ரேபரேலி, ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் மட்டுமே கடந்த 20 ஆண்டுகளாக பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். தற்போதுதான் அவருக்கு கட்சியில் பொறுப்பு அளித்து நேரடி அரசியலில் ஈடுபட வைத்துள்ளார் ராகுல் காந்தி.