போபாலில் இன்று அருண்ஜெட்லி மற்றும் சிவராஜ் சவுகான் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
Bhopal: ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் சிபிஐ அமைப்பு விசாரணை நடத்தவும், சோதனை செய்யவும் வழங்கிய அனுமதியை இரண்டு மாநிலங்களும் திரும்ப பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மறைப்பதற்கு நிறைய வைத்திருப்பவர்களே தங்கள் மாநிலங்களுக்குள் சிபிஐ-க்கு அனுமதி மறுக்கின்றனர். ஊழல் விவகாரத்தில் எந்தவொரு மாநிலத்திற்கும் இறையாண்மை என்பது கிடையாது என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தனது அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான கருவியாக சிபிஐ-யை பயன்படுத்திக் கொண்டதன் மூலம் அதன் சுதந்திரம் இழந்துள்ளது என ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி கூறியது. இதைத்தொடர்ந்து, மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசும், சிபிஐ-க்கு அனுமதி மறுப்பு தெரிவித்து மத்திய அரசை குற்றம்சாட்டியது.
ஆந்திராவின் நடவடிக்கையானது அச்சத்தினால் ஏற்பட்டு உள்ளது. அது எந்த குறிப்பிட்ட நடவடிக்கையையும் சார்ந்து எடுக்கப்படவில்லை. இந்தியாவில் மத்திய அமைப்பு ஒன்றை நாம் கொண்டுள்ளோம். இதன் கீழ் தொடக்கத்தில் அரசு ஊழியர்களை விசாரிக்க உருவாக்கப்பட்ட சி.பி.ஐ. அமைப்பு ஆனது, மாநிலங்கள் அல்லது நீதிமன்றங்கள் பரிந்துரைக்கும் சில தீவிர வழக்குகளையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த தருணத்தில் இதனை தவிர்த்து வேறு எதுவும் நான் கூறவில்லை என அவர் கூறினார்.