This Article is From Nov 04, 2019

ஆம்புலன்ஸை அழைக்காமல் செல்போனில் வீடியோ எடுத்தவர்களால் பறிபோனது ஒரு உயிர்!!

செல்போன் மோகத்தால் நல்லவை பல நடந்தாலும், அதில் ஊறிப்போன நபர்களால் சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படத்தான் செய்கின்றன.

ஆம்புலன்ஸை அழைக்காமல் செல்போனில் வீடியோ எடுத்தவர்களால் பறிபோனது ஒரு உயிர்!!

ஆம்புலன்ஸ் இல்லாமல் குப்பை வண்டியில் கொண்டு செல்லப்பட்ட நோயாளி.

Puducherry:

உயிருக்கு போராடிக்  கொண்டிருந்தவரை காப்பாற்ற ஆம்புலன்ஸை அழைக்காமல், செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபர்களால் ஒரு உயிர் பரிதாபமாக போனது.

இந்த சம்பவம், புதுச்சேரியில் நடந்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவர், புதுச்சேரியில் சுத்துகேனி என்ற கிராமத்தில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். ஏற்கனவே காச நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு உடல்நிலை மேலும் பலவீனம் அடைந்திருக்கிறது. 

இதையடுத்து சுப்ரமணியை அவரது மச்சானும், தங்கையும் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த 3 பேரிடமும் செல்போன் கிடையாது. எனவே அவர்கள் ஆம்புலன்ஸை எப்படி அழைப்பது என்று தெரியாமல் பதட்டத்தில் இருந்தனர்.

இதையடுத்து சுப்ரமணியை குப்பை வண்டி போன்ற ஒன்றில் எடுத்துக் கொண்டு, 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

செல்லும் வழியில் அவர்களை பார்த்தவர்கள் செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்தார்களே தவிர, ஆம்புலன்ஸை அழைக்க யாரும் முன்வரவில்லை. ஒருவேளை புகைப்படம் எடுப்பதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் சமூகத்திற்கு செய்யும் உதவியாக அவர்கள் கருதியிருக்கலாம். 

இந்த நிலையில், மருத்துவமனைக்கு குப்பை வண்டியில் தாமதாக அழைத்துச் செல்லப்பட்ட சுப்ரமணி, வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது சடலத்தை ஊருக்கு கொண்டு செல்வதிலும் சிக்கல் எழுந்தது.

சுப்ரமணியின் வீடு தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் இருப்பதால் அதற்கு அதிகாரிகளின் ஒப்புதல் தேவைப்பட்டிருக்கிறது. இதனால் வேறு வழியின்றி மீண்டும் குப்பை வண்டியில் சுப்ரமணியின் சடலம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

இதனை அறிந்த காவல்துறை அதிகாரி முருகானந்தன் என்பவர், தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். 

இதுகுறித்து NDTVக்கு முருகானந்தம் அளித்த பேட்டியில், 'மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுப்ரமணி உயிரிழந்து விட்டார். கூலித் தொழில் செய்யும் இவர்கள் இருளர்கள் பிரிவை சேர்ந்தவர்கள். அவர்களிடம் மொபைல் போன் கூட கிடையாது. 

உயிருக்கு போராடிய சுப்ரமணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, அதனை செல்போனில் ரிக்கார்டு செய்தவர்கள் ஆம்புலன்ஸை அழைத்திருந்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் சுப்ரமணி ஒருவேளை உயிர் பிழைத்திருந்திருப்பார்.' என்று தெரிவித்தார். 
 

.