This Article is From Dec 07, 2019

’அவர்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்’: உன்னாவ் பெண்ணின் தந்தை குமுறல்!

Unnao case: உயிரிழந்த பெண்ணின் சகோதரர் கூறும்போது, எனது சகோதரி என்னிடம் எப்படியாவது காப்பாற்றிவிடு, அவர்கள் மரணத்தை பார்க்க வேண்டும் என்றார். நாங்கள், உன்னை நிச்சயம் காப்பாற்றிவிடுவோம் என்றேன். எனினும், எங்களால் முடியவில்லை. அந்த 5 பேரும் உயிருடன் இருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.

’அவர்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்’: உன்னாவ் பெண்ணின் தந்தை குமுறல்!

Unnao case: அந்த பெண் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 90 சதவீதம் காயமடைந்தார்.

New Delhi:

தீ வைத்து எரிக்கப்பட்ட உன்னாவ் பெண், டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தை தொடர்ந்து, அந்த பெண்ணின் தந்தை, எனது மகள் உயிரிழக்க காரணமானவர்கள் ஐதரபாத்தில் நடந்த என்கவுன்டர் சம்பவம் போல் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.  

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த உயிரிழந்த பெண்ணின் தந்தை கூறும்போது, நான் அரசு மற்றும் அதிகாரிகளிடம் எதிர்பார்ப்பது ஒன்றை மட்டும் தான், எனது மகள் உயிரிழக்க காரணமானவர்கள் ஐதரபாத்தில் நடந்த என்கவுன்டர் சம்பவம் போல் சுட்டுகொல்லப்பட வேண்டும். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. எனது மகள் ரேபரேலி செல்ல தனியாக ரயில் நிலையம் சென்றபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்த பெண்ணின் சகோதரர் கூறும்போது, எனது சகோதரி என்னிடம் எப்படியாவது காப்பாற்றிவிடு, அவர்கள் மரணத்தை பார்க்க வேண்டும் என்றார். நாங்கள், உன்னை நிச்சயம் காப்பாற்றிவிடுவோம் என்றேன். எனினும், எங்களால் முடியவில்லை. அந்த 5 பேரும் உயிருடன் இருக்கக்கூடாது என்று அவர் கூறினார். 

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் 23 வயது பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், தனது கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இரண்டு ஆண்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர். 

எனினும், சில நாட்களில் அவர் ஜாமின் வாங்கி வெளியே வந்தார். மற்றொரு குற்றவாளியை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. எனினும், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவத்துள்ளனர். 

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அந்த பெண் நீதிமன்றம் செல்லும் வழியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த பெண்ணை தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளது. இதில், அந்த பெண் உயிருக்கு போராடும் நிலையில் லக்னோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதைத்தொடர்ந்து, லக்னோவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட அந்த பெண்
அங்கு சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு 11.10 மணியளவில் அந்த பெண்ணுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இரவு 11.40 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, அந்த தன் மீது தீ வைத்தவர்கள் குறித்து அந்த பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தனது கிராமத்தில் இருந்து சென்று கொண்டிருந்துள்ளார், அப்போது ரயில் நிலையம் அருகே சென்ற போது, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான 2 பேர் உட்பட 5 பேர் அங்கு அவருக்காக காத்திருந்துள்ளனர். 

தொடர்ந்து, அவர்கள் 5 பேரும் என்னை சுற்றி வளைத்து எனது கழுத்தில் கத்தியால் குத்தினர். இதைத்தொடர்ந்து, என் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர் என்று அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 
 

.