New York: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கடை நடத்தி வந்த தேர்லோக் சிங் என்னும் நபர் அவரது கடையிலேயே மார்பில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடைசி மூன்று வாரங்களில் இதுபோன்று சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
எசக்ஸ் கவுண்டி குற்ற அலுவலர் இதனைக் கொலை என்று அறிவித்துள்ளதாக ABC7NY செய்தி வெளியிட்டுள்ளது. கொலைக்கான பின்னணி இன்னும் துலங்கவில்லை. ஆறு ஆண்டுகளாக இக்கடையை நடத்தி வந்த தேர்லோக் சிங் நிச்சயம் அங்கு தன்னை யாரும் தாக்குவார்கள் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட தேர்லோக் சிங் மிகவும் கனிவானவர் என்று அங்கு வசிப்போர் கூறுகிறார்கள். இந்தியாவில் வசிக்கும் தனது குடும்பத்தினரைக் காப்பாற்றுவதற்காக அவர் அமெரிக்காவில் கடை நடத்தி வந்துள்ளார். அவரது கடை தற்போது மூடப்பட்டுவிட்டது.
கடந்த மூன்று வாரங்களில் சீக்கியர்கள் மீது இதுபோன்று வன்முறை நடப்பது இது மூன்றாவது முறையாகும். கடந்த ஆறாம் தேதி, கலிபோர்னியாவில் 71 வயதான சாஹிப் சிங் என்பவர் காலை வாக்கிங் சென்றபோது டைரோன் மெக்கலிஸ்டர் என்பவராலும் 18 வயதுக்குக் கீழான ஒரு இளைஞராலும் மோசமாகத் தாக்கப்பட்டார். உள்ளூர் காவல்துறை தலைமை அதிகாரியின் மகனான மெக்கலிஸ்டர் மீது வழிப்பறி, முதியோர் மீது தாக்குதல், கொடூர ஆயுதத்தால் தாக்குதல் முயற்சி ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல ஜூலை 31ஆம் தேதி, 50 வயதான சுர்ஜித் மல்ஹி என்ற சீக்கியர் குடியரசுக் கட்சியியின் பேரவை உறுப்பினர் ஜெஃப் டென்ஹாமுக்காகவும் பிற உள்ளூர் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்காகவும் பரப்புரைச் சுவரொட்டிகள் ஒட்டிக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். அவரைத் தாக்கிய நபர்கள், “உன் நாட்டுக்குத் திரும்பிப் போ” என்று கத்தியதுடன் அதே வாசகத்தை அவரது டிரக்கிலும் வரைந்து சென்றுள்ளனர்.
தொடரும் தாக்குதல் சம்பவங்களால் அமெரிக்க சீக்கியர்கள் அச்சத்தில் உள்ளனர். கலிபோர்னியாவில் நடந்த இவ்விரு சம்பவங்களை அடுத்து அங்குள்ள சீக்கிய சங்கத்தினர் தங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் விழிப்புணர்வுடன் இருக்குமாறும், நிறவெறிப் பாகுபாடு போன்றவற்றை எதிர்கொள்ள நேர்ந்தால் உடனடியாக புகார் செய்யுமாறும், தங்கள் உரிமைகளைப் பற்றி அறிந்துகொள்ளுமாறும் வலியுறுத்தி வருகின்றனர்.