32 பேரில் 11 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது
Chennai: கடலூரின் புலியூர் குட்டுசகையில் இருக்கும் கரும்பு தோட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்த 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 11 குழந்தைகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
50,000 ரூபாய் கடன் வாங்கிய விவகாரத்தில் அவர்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு, 7 ஆண்டுகள் வேலை வாங்கப்பட்டு வந்துள்ளது. இந்த 32 பேர் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தொழிலாளர் துறைக்கும் வந்த தகவல்படி, இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்ட பெண்கள், கரும்பு தோட்டத்தில் வேலை பார்க்க மட்டும் வைக்கப்படவில்லை என்றும் பாலியல் ரீதியாகவும் அவர்கள் சுரண்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்த அனைவரும் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவரான டாக்டர் கிருஷ்ணன் தான் இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அவர், ‘ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்த அனைவருக்கும் வாரத்துக்கு 500 முதல் 1000 ரூபாய் மட்டுமே கூலி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும் பகுதியும் கடனை காரணம் காட்டி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. பல நேரங்களில் அவர்களுக்கு கடலூரில் வேலை இருக்கவில்லை. வாகனங்களில் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வேலை வாங்கப்பட்டு உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட அனைவரும் 7 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. 32 பேருக்கும் நிவாரண உதவிகளை செய்ய கடலூர் மாவட்ட நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.