This Article is From Jan 21, 2020

“நாகரீகமான அரசியல் செய்ய விரும்பினால்…”- ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்!!

Rajini - Periyar Row: "அரசியலில் தவறு செய்வது சகஜம்தான். ஆனால், அது தவறு என்று தெரியவரும் போது மன்னிப்பு கேட்பதுதான் நியாயமாக இருக்கும்"

“நாகரீகமான அரசியல் செய்ய விரும்பினால்…”- ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்!!

Rajini - Periyar Row: 'ரஜினி வருத்தம் தெரிவித்தால் அது நாகரீகமான அரசியலாக இருக்கும்'

Rajini - Periyar Row: துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை முன்வைத்தார். ரஜினி சொன்னது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை, அவர் வரலாற்றைத் திரித்துச் சொல்கிறார் என்றும், பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரஜினி. அவரின் கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், எதிர் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருக்கும், தனது போயஸ் தோட்டம் இலத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

ரஜினியின் இந்த மறுப்புக்கு திருமா, “பெரியார், ராமர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள் அவதாரங்கள் மீது காட்டமான விமர்சனங்களை வைத்துள்ளார். ஆனால், அவர் நாகரீகமான அரசியலைக் கையாண்டார். ராஜாஜியின் கொள்கைகளை எதிர்த்தாலும் அவருடன் நல்ல நட்புறவில் இருந்தவர் பெரியார். அப்படிப்பட்டவர் பற்றித்தான் ரஜினிகாந்த், தவறாக பேசியுள்ளார். ரஜினி சொல்லும் சம்பவம் நடக்கவே இல்லை. அது பிழையான வரலாறு. 

அரசியலில் தவறு செய்வது சகஜம்தான். ஆனால், அது தவறு என்று தெரியவரும் போது மன்னிப்பு கேட்பதுதான் நியாயமாக இருக்கும். நாகரீகமானது. சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்துப் பேசுவது ரஜினிக்கு நல்லதல்ல. அனைத்துத் தரப்பு தரவுகளை ஆராய்ந்து அவர் முடிவெடுக்க வேண்டும். ரஜினி, வருத்தம் தெரிவிப்பதும் தெரிவிக்காமல் இருப்பதும் அவர் உரிமை. அதைச் செய்ய வேண்டும் என்று என்னால் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், வருத்தம் தெரிவித்தால் அது நாகரீகமான அரசியலாக இருக்கும்,” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
 

.