This Article is From Jan 30, 2019

‘ஏழை மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ள ராகுல்!’- நெகிழும் திருமாவளவன்

அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்ற திட்டம் ஏற்கெனவே பின்லாந்து, இத்தாலி முதலான நாடுகளில் நடைமுறையில் உள்ளது, திருமாவளவன்

‘ஏழை மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ள ராகுல்!’- நெகிழும் திருமாவளவன்

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் கொடுப்போம்’ - ராகுல்

ஹைலைட்ஸ்

  • அனைவருக்கும் வருமானம் என்ற அறிவிப்பை ராகுல் சொல்லியிருந்தார்
  • அதைத்தான் திருமாவளவன் வரவேற்றுள்ளார்
  • காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைய வேண்டும் என்றும் திருமா கூறியுள்ளார்

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் கொடுப்போம்' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சில நாட்களுக்கு முன்னர் பேசியிருந்தார். இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘ராகுல் காந்தியின் அறிவிப்பு ஏழை மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது' என்று நெகிழ்ந்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானத்தை அளிப்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். கடந்த ஐந்து ஆண்டு காலமாக நடந்து வரும் கார்ப்பரேட் ஆட்சியில் ஏழை எளிய மக்கள் அல்லலுற்று வருகின்றனர். அவர்களது வயிற்றில் பால்வார்க்கும் விதமாக ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. அதற்காக அவரைப் பாராட்டுகிறோம்.

அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்ற திட்டம் ஏற்கெனவே பின்லாந்து, இத்தாலி முதலான நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியம் இதுகுறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். குடும்பமொன்றுக்கு மாதம் தோறும் ஆயிரத்து ஐநூறு ரூபாயை வழங்குவதற்கான திட்டமொன்றைத் தயாரித்து அளித்துள்ளார். இந்தத் திட்டம் நடைமுறையில் சாத்தியம் தான் என்பதற்கு பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியத்தின் அறிக்கையே ஆதாரமாகும்.

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடிமக்கள் ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவோம் என 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தது போல அண்டப்புளுகு அறிவிப்பு அல்ல ராகுல் காந்தியின் அறிவிப்பு. அது நேரு காலம் முதல் ஏழை எளிய மக்களின்பால் காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடு. 100 நாள் வேலைத் திட்டத்தை உருவாக்கி கிராமப்புற வறுமையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்த காங்கிரஸ் கட்சி இப்போது நாட்டின் வளத்தில் அனைத்து குடிமக்களுக்கும் பங்கு இருக்கிறது என்ற உண்மையை வலியுறுத்தும் விதமாக இந்த அறிவிப்பைச் செய்திருக்கிறது.

நாட்டில் ரத்தக்களறியை ஏற்படுத்த நினைக்கும் பாஜகவின் தீய நோக்கம் நிறைவேறாமல் தடுக்கவும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவான மதச்சார்பற்ற அரசு காங்கிரஸ் தலைமையில் அமையவும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறைகூவி அழைக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

.