விஜயகாந்தின் உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக ஸ்டாலின் சென்றார்.
ஹைலைட்ஸ்
- நேற்று விஜயகாந்தை நேரில் சென்று பார்த்தார் ஸ்டாலின்
- ஸ்டாலினுக்கு முன்னர் ரஜினிகாந்தும் விஜயகாந்தை சந்தித்தார்
- தொடர்ந்து பல தரப்பினரும் விஜயகாந்தை சந்தித்து வருகின்றனர்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேற்று நேரில் சென்று சந்தித்தார். விஜயகாந்தின் உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக ஸ்டாலின் சென்றார்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ‘கலைஞர் மறைவின் போது, விஜயகாந்த் இங்கு இல்லை. அப்போது அவர் வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், சிகிச்சை முடிந்து சென்னை வந்த பின்னர், விமான நிலையத்திலிருந்து நேராக கலைஞர் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அதை என்னால் மறக்கவே முடியாது. அதேபோல, கலைஞர் மறைவின் போது வீடியோ மூலம் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார் விஜயகாந்த். அப்போது, அவர் கண் கலங்கியது, இன்றைக்கும் நம் கண் முன்னே நினைவாடிக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவரை இன்று நான் சந்தித்தேன். உடல் நலம் குறித்து விசாரித்தேன். அவர் நன்றாக தேறி வந்துள்ளார். இன்னும் உடல் ஆரோக்கியம் பெற்று அவர் மக்கள் தொண்டாற்றிட வேண்டும்' என்றார்.
உடனே ஒரு பத்திரிகையாளர், ‘உங்கள் கூட்டணிக்கு தேமுதிக வந்தால் வரவேற்பீர்களா..?' என்று கேட்டதற்கு, ‘உங்கள் நல்ல எண்ணத்துக்கு பாராட்டுகள், நன்றிகள்' என்று சூசகமாக பதில் கூறிவிட்டு கிளம்பினார்.
இந்நிலையில் இன்று இந்த சந்திப்பு குறித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ‘அமைச்சர் செல்லூர் ராஜூ, ஸ்டாலின் - விஜயகாந்தின் காலைப் பிடித்திருப்பது போல இருக்கிறது என்று கூறியுள்ளார். அங்கு எந்த அரசியலும் பேசப்படவில்லை என்று சொன்ன பிறகும் அதிமுக இப்படி பேசியிருக்கிறது. ஸ்டாலின், விஜயகாந்தை நேரில் சென்று பார்த்ததே அதிமுக தரப்பில் பீதியைக் கிளப்பியுள்ளதைத்தான் அவர்களின் கருத்து சுட்டிக் காட்டுகிறது' என்று கருத்து கூறியுள்ளார்.
மேலும் படிக்க - “தேமுதிக, திமுக கூட்டணியில் இணையுமா..?"