பிரதமர் இரவு 9 மணியளவில் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து தீபங்களை ஏற்றுமாறு கோரியிருந்தார்.
ஹைலைட்ஸ்
- கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைவோம்: மோடி
- மோடி, நேற்றிரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றச் சொன்னார்
- பலரும் அவரின் கோரிக்கையை ஏற்று விளக்கு ஏற்றினார்கள்
இந்தியாவில் கொரோனா தொற்றால் 4000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று லட்சக்கணக்கான மக்கள் அத்தியாவசியமற்ற விளக்குகளை அணைத்து, அகல் விளக்குகளையும், மெழுகுவர்த்திகளையும் தங்கள் வீடுகளிலும், மேல் மாடங்களிலும் நேற்றிரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் ஏற்றி வைத்தனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சூசகமாக விமர்சித்துள்ளார் ‘மே 17 இயக்கத்தின்' திருமுருகன் காந்தி.
பிரதமர் இரவு 9 மணியளவில் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து தீபங்களை ஏற்றுமாறு கோரியிருந்தார். ஆனால், மக்கள் கிட்டதட்ட 30 நிமிடங்களுக்கும் மேலாக விளக்கினை ஏற்றி வைத்து ஆரவாரமிட்டுக் கொண்டிருந்தனர். மின் விளக்குகளும் 30 நிமிடத்திற்கும் மேலாக அணைக்கப்பட்டிருந்தன.
பிரதமர் 9.30 மணியளவில், டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் குத்துவிளக்கு ஏற்றிய புகைப்படத்தினை ட்விட்டரில் ஒரு சமஸ்கிருத கவிதையோடு இணைத்து பகிர்ந்திருக்கிறார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வீடுகளுக்கு வெளியே விளக்குகளை ஏற்றி வைத்தனர். அதே போல உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரும் விளக்குகளை ஏற்றியிருந்தனர்.
உத்ரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் சுடர்விடும் விளக்குகளுடன் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டனர்.
முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்டோரும், திரைப் பிரபலங்களான ரஜினகாந்த், நயன்தாரா உள்ளிட்டோரும் பிரதமரின் கோரிக்கையை ஏற்று விளக்குகள் ஏற்றினர். பல இடங்களில் மக்கள் பட்டாசுகள் வெடித்தும், தீபம் ஏந்தி ஊர்வலமாக சென்ற காட்சிகளும் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பின.
இந்நிலையில் திருமுருகன் காந்தி, “ஆரிய இந்துத்துவ பார்ப்பனிய வேதமதம்' என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நம்பிக்கை குப்பைகள் எவ்வளவு 'மூடத்தனமானது', 'பிற்போக்குத்தனமானது', 'மக்களை முட்டாளாக்குவது' என்பதை உலகிற்கே 'விளக்கு' போட்டு காண்பித்த பிரதமருக்கு நாம் ஏன் நன்றி சொல்லக்கூடாது? பாசிட்டிவாக யோசிப்போமே!!!” என்று சூசகமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.