This Article is From May 07, 2020

இனி ‘டாஸ்மாக் சென்று வந்தவர்கள்’ என கொரோனா பட்டியல் வாசிக்கப்படுமா?- அரசை சாடும் திருமுருகன்!

'ஊடகங்களில் கொரொனோ தொற்று பட்டியல் சொல்லும் பொழுது 'தப்ளிக் மாநாடு சென்று வந்தவர்களில்...' என பேசியது போல'

இனி ‘டாஸ்மாக் சென்று வந்தவர்கள்’ என கொரோனா பட்டியல் வாசிக்கப்படுமா?- அரசை சாடும் திருமுருகன்!

'இனிவரும் நாட்களில் 'டாஸ்மாக் கடைகளுக்கு சென்று வந்தவர்களில்..' என்று அதிமுக அரசு கொரொனோ பாதிக்கப்பட்டவர் பட்டியலை வாசிக்குமா?'

ஹைலைட்ஸ்

  • இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன
  • சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது: அரசு
  • தமிழகத்தில் சென்னைதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது

கொரோனா பரவலை மட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. கடந்த திங்கட்கிழமை முதல் இரண்டாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்தது மத்திய அரசு. அதே நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகளையும் அறிவித்தது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கடந்த திங்கட்கிழமை முதல் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இன்று முதல் தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “சாராயக்கடைகளை திறப்பது இந்த அரசின் மக்கள் விரோதபோக்கினை அப்பட்டமாக்குகிறது. சுகாதார பணியாளர்களுக்கான பாதுகாப்பை கூட உறுதிபடுத்தாத அரசு எப்படி மக்களை காக்க போகிறது? சாராய விற்பனை எளிய மக்கள் வாழ்வை நாசமாக்கும். மிக முக்கியமாக சாராய விற்பனையானது தமிழக பெண்கள் மீதான அரச பயங்கரவாதமே.

ஊடகங்களில் கொரொனோ தொற்று பட்டியல் சொல்லும் பொழுது 'தப்ளிக் மாநாடு சென்று வந்தவர்களில்...' என பேசியது போல, இனிவரும் நாட்களில் 'டாஸ்மாக் கடைகளுக்கு சென்று வந்தவர்களில்..' என்று அதிமுக அரசு கொரொனோ பாதிக்கப்பட்டவர் பட்டியலை வாசிக்குமா?

மதவெறிக்கும், சாராயவெறிக்கும் துணை போகிறார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகள் திறப்பினால் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக மது வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை என்றால் கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 

.