This Article is From Nov 28, 2019

முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தமிழக எம்.பி- திருவள்ளூருக்கு வருகிறது மருத்துவ கல்லூரி!

திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் மருத்துவக கல்லூரி அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது

முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தமிழக எம்.பி- திருவள்ளூருக்கு வருகிறது மருத்துவ கல்லூரி!

'என் மேல் நம்பிக்கை வைத்து எனக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் எனது தொகுதி மக்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்'- ஜெயக்குமார் எம்.பி

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் புதிதாக மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மருத்துவ கல்லூரி கொண்டு வருவேன் என்று சொன்னது தனது முதல் வாக்குறுதி என்றும், வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது மகிழ்ச்சி என்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர் காங்கிரஸைச் சேர்ந்த ஜெயக்குமார். நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்துள்ள இவர், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தேசிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், திருவள்ளூர் தொகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் மருத்துவ கல்லூரியை கொண்டு வருவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். இந்நிலையில், திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் மருத்துவக கல்லூரி அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இது குறித்து ஜெயக்குமார் எம்.பி., “இன்றைய தினம் எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான நாள். எனது தீவிர முயற்சியால் திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. என் தேர்தல் அறிக்கையின் முதல் வாக்குறுதியை நான் நிறைவேற்றியுள்ளேன். எனது வேண்டுகோளை ஏற்று மத்திய சுகாதார துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்ததற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் இக்கல்லூரிக்காக நிலம் தேர்வு செய்தல் உள்ளிட்ட ஒத்துழைப்பு அளித்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். 

என் மேல் நம்பிக்கை வைத்து எனக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் எனது தொகுதி மக்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்,” என நெகிழ்ந்துள்ளார். 

.