Thiruvalluvar Row - பிள்ளையார்பட்டியில் அவமதிக்கப்பட்ட திருவள்ளூவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து, தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்யும் நிகழ்வு நடந்துள்ளது.
Thiruvalluvar Row - தஞ்சை, பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை (Thiruvalluvar statue) அவமதிக்கப்பட்டுள்ளது தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கின்றன. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக (BJP) தலைவர்கள், அவர்களின் ட்விட்டர் பக்கங்களில் மற்றும் தமிழக பாஜக-வின் ட்விட்டர் பக்கத்தில், காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படங்களைப் பகிர்ந்திருந்தனர். இதுவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிள்ளையார்பட்டியில் அவமதிக்கப்பட்ட திருவள்ளூவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து, தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்யும் நிகழ்வு நடந்துள்ளது.
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த சர்ச்சைக்குரிய காரியத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது தலைமையில் இந்து மக்கள் கட்சியினர் இன்று, திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து, திருக்குறளை சொல்லியபடி தீபாராதனைக் காட்டி வழிபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாஜக-வைச் சேர்ந்த சிலர், பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலைக்கு பாலபிஷேகம் செய்தது குறிப்பிடத்தக்கது. திருவள்ளுவர் எந்த மதத்தையும் சேராதவர் என்றும், திருக்குறள் உலகப் பொது மறை என்றும் தொடர்ந்து ஒரு சாரர் சொல்லி வருகின்றனர். அதே நேரத்தில் வலதுசாரி அமைப்புகள் திருவள்ளுவர், இந்து மதத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்றும், ஆகையால் அவருக்குக் காவி உடை தரிப்பதில் எந்தப் பிழையும் இல்லை என்றும் கூறி வருகிறது.