This Article is From Jan 04, 2019

திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் தேர்வு!

திருவாரூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் தேர்வு!


திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி, கடந்த ஆக.7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, கலைஞரின் மறைவு குறித்து சட்டப்பேரவை அலுவலகத்துக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் துறைக்கு கலைஞரின் திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் 28ஆம் தேதி அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் வரும் 10ம் தேதி வரை நடக்கயிருக்கிறது.

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார்? என்பது குறித்து திமுகவில் தீவிர ஆலோசனை நடந்து வந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என அதிகமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீதும் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருவாரூர் இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் இன்று மாலை நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர். சுமார் 1.30 மணி நேரமாக இந்த நேர்காணல் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, திருவாரூர் திமுக செயலாளரான பூண்டி கலைவாணன் திருவாரூர் திமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்தார். 2007ல் மாவட்ட செயலாளராக இருந்த பூண்டி கலைச்செல்வனின் சகோதரர் பூண்டி கலைவாணன் ஆவார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பூண்டி கலைவாணன் 10 ஆண்டுகளுக்கு மேலாக திருவாரூர் மாவட்டச் செயலாளராக உள்ளார்.
 

.