கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினத்தைக் கொண்டாடும் விதமாக நாட்டின் பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கார்கில் தினத்தையும், கார்கில் போரில் நாட்டுக்காக சண்டையிட்ட ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் விதத்திலும் சென்னையைச் சேர்ந்த ‘வளசை வேங்கைஸ்’ என்ற குழு விழிப்புணர்வு ஓட்டத்தை நடத்தியுள்ளது.
கடந்த 1999 ஆம் ஆண்டு, மே மாதம் 6 ஆம் தேதி காஷ்மீர் பகுதியில் உள்ள எல்லையை மீறிய பாகிஸ்தான் ராணுவத்தினர் தீவிரவாதிகள் உதவியுடன் இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் நுழைந்தனர். 18 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியான அங்கு அவர்கள் முகாம்கள் அமைத்து தங்கியிருந்தனர். தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்கள் அளித்தது. இந்த திடுக்கிடும் விஷயம் குறித்து 3 நாட்களுக்குப் பின்னர் இந்திய ராணுவத்துக்கு தெரியவந்தது. உடனடியாக, தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் தொடுத்தது. ஏறக்குறைய 15 நாட்கள் நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பல ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இதைத் தொடர்ந்து மே 26 ஆம் தேதி, இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் இதில் பங்கேற்று பாகிஸ்தான் வீரர்களுடன் போரில் ஈடுபட்டனர். தாக்குதலை சமாளிக்க முடியாமல் சமரசப் பேச்சுக்கு வந்த பாகிஸ்தானின் அழைப்பை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது. தொடர் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஊடுருவல்காரர்களைத் திரும்பப் பெற சம்மதித்தது பாகிஸ்தான் ராணுவம். ஆனால், தீவிரவாதிகளுக்கு இந்த உடன்பாட்டில் சம்மதம் இல்லை. இதையடுத்து, இந்திய ராணுவம் நடத்திய தீவிர தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாத தீவிரவாதிகள் கார்கில் பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இதைப் போற்றும் வகையில் தான் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதி ‘கார்கில் வெற்றி தினம்’ நினைவுகூரப்பட்டு வருகிறது.
இதையொட்டி, உடற்பயிற்சியை பிரதானமாக வைத்து நிகழ்ச்சிகள் நடத்தும் ‘வளசை வேங்கைஸ்’ என்ற சென்னையைச் சேர்ந்த குழு, கார்கில் போர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், கார்கில் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையிலும் இன்று ஒரு ‘சிறப்பு ஓட்டத்தை’ ஒருங்கிணைத்தனர்.
இதன்படி, வளசை வேங்கைஸ் குழுவைச் சேர்ந்த 8 பேர் வளசரவாக்கத்தில் உள்ள மெகா மார்ட்டில் ஆரம்பித்து, மெரினா கடற்கரை மார்க்கமாக கார்கில் போர் நினைவிடம் வரை 14 கிலோ மீட்டருக்கு ஜாக்கிங் செய்தனர். வளசை வேங்கைஸ் குழுவைச் சேர்ந்த மேஷாக் வளசரவாக்கத்தில் ஆரம்பித்து, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிளிங் செய்து போர் நினைவிடத்துக்கு வந்தடைந்தார். அவர் கிட்டத்தட்ட 70 கிலோ மீட்டர் சைக்கிளிங் செய்தார்.
இந்த சிறப்பு ஓட்டம் குறித்து வளசை வேங்கைஸ் குழுவைச் சேர்ந்த பால் பிரதீப்பிடம் பேசினோம், ‘சிறு வயது முதலே எனக்கு ராணுவ வீரர்களின் தியாகம் குறித்தும் ராணுவம் குறித்தும் அதிக ஈடுபாடு இருந்தது. இதையொட்டித்தான் கடந்த சில ஆண்டுகளாக கார்கில் தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வந்தேன். 15 வது கார்கில் தினத்தன்று, நந்தம்பாக்கத்தில் இருக்கும் போர் நினைவிடத்தில் பெரிய நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தோம். அதைப் போலவே, அடுத்த ஆண்டு 20 வது கார்கில் தினத்தை மிக விமர்சையாக கொண்டாட உள்ளோம். ராணுவ வீரர்களையும் அவர்கள் செய்த தியாகத்தையும் நாம் என்றும் மறந்துவிடக் கூடாது’ என்றார் உருக்கமாக.