This Article is From Jul 25, 2018

2019-ல் விற்பனைக்கு வருகிறது ஸ்பாட்மினி ரோபோ நாய்கள்!

பாத்திரங்களை எடுத்து வருவது, ஆர்டர்களை உங்கள் வீட்டு வாசலுக்கே வந்து டெலிவரி செய்வது, படி ஏறுவது என திணறடிக்கும் பல பணிகளை இந்த ரோபோ நாய் செய்கிறது

2019-ல் விற்பனைக்கு வருகிறது ஸ்பாட்மினி ரோபோ நாய்கள்!

கடந்த மே மாதம், பாஸ்டன் டைனமிக்ஸ் யூ-டியூபில் வெளியிட்ட இரு ரோபோ வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 25 மில்லியனுக்கும் அதிகமானோர் அக்காணொளிகளைப் பார்த்ததோடு, மனிதனைப் போன்றே செயல்பட்ட ரோபோவினைப் பார்த்து அச்சமும் தெரிவித்திருந்தனர்.

தற்போது, ஸ்பாட்மினி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த அச்சமூட்டும், நான்கு கால்கள் கொண்ட, நாய் ரோபோ விற்பனைக்கு வர இருக்கிறது என்று பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனர் மார்க் ரைபர்ட் தெரிவித்துள்ளார்.

பாத்திரங்களை எடுத்து வருவது, ஆர்டர்களை உங்கள் வீட்டு வாசலுக்கே வந்து டெலிவரி செய்வது, படி ஏறுவது என உங்களைத் திணறடிக்கும் பல பணிகளையும் இந்த ரோபோ நாய் செய்கிறது.

கடந்த மாதம் ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடைபெற்ற கம்ப்யூட்டர் கண்காட்சியில், தங்கள் நிறுவனம் ஸ்பாட்மினி ரோபோவை பாதுகாப்பு, டெலிவரி, கட்டுமானம், வீட்டு உதவி ஆகியவற்றில் ஈடுபடுத்தி சோதனை செய்து வருவதாகப் பார்வையாளர்களிடம் ரைபர்ட் கூறியிருந்தார். மேலும் எதிர்காலத்தில், ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட அணுவுலை விபத்து போன்ற மனிதர்கள் செல்ல ஆபத்தான பகுதிகளில் இந்த ரோபோ உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

தற்போது “இன்னும் ஓராண்டில் இந்த ரோபோக்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. நாங்களே கைப்பட பத்து ரோபோக்களைத் தயாரித்துள்ளோம், இன்னும் நூறு ரோபோக்களை உற்பத்தியாளர்கள் மூலம் இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாரிக்க இருக்கிறோம்” என்றும் அவர் கூறினார். 2019-ன் அரையாண்டு முதல் ஆண்டுக்கு ஆயிரம் ஸ்பாட்மினி ரோபோக்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் இவற்றின் விலை என்னவாக இருக்கும் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.

66 பவுண்டு எடையுள்ள இந்த ரோபோ இரண்டு அடி, நான்கு அங்குலம் உயரம் கொண்டதாகும். பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்த ரோபோக்களிலேயே இதுதான் மிகவும் அமைதியான சமர்த்து ரோபோ இது தானாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒன்றரை மணி நேரத்துக்கு ஓடக்கூடியது. பல்வேறு சென்சார்களின் உதவியோடு வெளி உலகில் சொன்ன இடத்துக்கு நடந்து செல்லும். சிறிய பணிகளைத் தானே செய்து முடித்தாலும் கொஞ்சம் பெரிய வேலை என்றால் அதை நிறைவேற்ற எஜமானரின் உதவி இதற்குத் தேவை.

மனிதனைப் போல வேகமாக இவை ஓடுவதையும் உதைத்துத் தள்ளினாலும் உடனடியாக பேலன்ஸ் செய்து எழுந்துக் கொள்வதையும் வீடியோவில் பார்த்த பலரும் இது ஏதோ பேரழிவின் ஆரம்பம் என அச்சம் தெரிவித்திருந்தனர். ஆனால், வாஷிங்டன் பல்கலைக்கழக ரோபாடிக்ஸ் பேராசிரியர் சித்தார்த்த சீனிவாசா “இடிபாடுகளிலும் சரியாக நடந்து செல்லும், நாய்களைப் போல வயதானவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடிய இந்த ரோபோ இத்துறையில் ஒரு பெரும் பாய்ச்சல். இதில் அச்சம் கொள்ள எதுவுமில்லை. என்னைப் பொருத்தவரை இது பொருட்களை உடைக்காத, மனிதர்கள் மேல் தாக்குதல் நடத்தாத, வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடிய சாதுவான ரோபோதான்” என்கிறார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news


.