திருநாவுக்கரசர், ‘இப்ப நான் டபவுள் சந்தோஷத்தில இருக்கிறேன்’ என்று உற்சாகம் ததும்ப பேசியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- கே.எஸ்.அழகிரி புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- திருநாவுக்கரசர், இரண்டரை ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவராக இருந்தார்
- அழகிரி, சிதம்பரம் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது
காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் கே.எஸ்.அழகிரி. இந்நிலையில் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், இன்று டெல்லி சென்று கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், ‘இப்ப நான் டபவுள் சந்தோஷத்தில இருக்கிறேன்' என்று உற்சாகம் ததும்ப பேசியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் திருநாவுக்கரசர், ‘காங்கிரஸில் சேர்வதற்குக் காரணமே ராகுல் காந்திதான். தமிழகத்தின் பல முக்கியத் தலைவர்கள் வகித்தப் பதவி காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் பதவி. அதில் என்னையும் நியமித்தது ராகுல் காந்திதான். அவருக்கு நன்றி. அந்தப் பொறுப்பில் யாரை வேண்டுமானால் அவர் மாற்றலாம். தற்போது எடுத்திருக்கும் முடிவால் ராகுல் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு குறையாது. நான் மட்டுமல்ல, எனது சந்ததியினரும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்காக சேவையாற்றுவார்கள்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்காகவும், தமிழகத்தில் அனைத்துத் தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற தலைவராக இருந்ததை விட, இப்போது அதிகம் உழைப்பேன். தமிழக காங்கிரஸுக்கு, இரண்டரை ஆண்டு காலம் தலைவராக இருப்பதே பெரிய விஷயம்தான். அதற்கு ராகுலுக்கு நன்றி.
தலைவர் பதவி கொடுக்கப்பட்டபோது நான் எவ்வளவு சந்தோஷமாக இருந்தேனோ, அதை விட தற்போது டபுள் மடங்கு சந்தோஷத்தில் இருக்கிறேன். 40 ஆண்டு கால அரசியலில் அனைத்துப் பதவிகளையும் பார்த்தவன் நான். எனக்கு அரசியலில் எதிரியே கிடையாது. நான் தலைவராக இருந்தபோது அனைத்து வித ஒத்துழைப்பும் கொடுத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. புதியதாக தலைவர் பதவியேற்றியுள்ள தலைவர் அழகிரிக்கு வாழ்த்துகள்' என்று முடித்தார்.