"கொரோனா எதிர்ப்பில் ஒற்றுமையை காட்டுவதற்காக ஒருமுறை ' கைதட்ட' சொன்னதே போதுமானது"
ஹைலைட்ஸ்
- இன்று காலை 9 மணிக்குப் பிரதமர் மோடி உரையாற்றினார்
- கொரோனா போராட்டத்தில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மோடி
- வரும் ஞாயிறு அன்று 9 நிமிடம் விளக்கு ஏற்றுங்கள்: மோடி
கொரோனா விவகாரம் தொடர்பாக இருமுறை நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்த நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். அதில், “ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அனைத்து மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்” என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த திடீர் அறிவிப்பால் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள முடியாது என்று கூறி விமர்சித்து வருகின்றன எதிர்க்கட்சிகள். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், மோடியை கடுமையாக சாடியுள்ளார்.
தனது உரையில் மோடி, ‘மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி.
மார்ச் 22-ம் தேதி கொரோனாவுக்கு எதிராக போராடும் மக்களுக்கு நீங்கள் நன்றி செலுத்திய விதம் மற்ற நாடுகளால் பின்பற்றப்படும் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது.
மேலும், ஏப்ரல் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு வீட்டில் மின் விளக்குகளை அனைத்து டார்ச், விளக்குகள் அல்லது மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். இதன் மூலம், நம்மில் யாரும் தனியாக இல்லை என்பதை உணர்த்துவோம். 130 கோடி இந்தியர்களின் பலத்தை உயர்த்துவோம்.
இவை அனைத்திலும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் வீடுகள் மற்றும் பால்கனியில் இருந்தே இதனை செய்ய வேண்டும். இந்த முயற்சியின் போது எந்த நேரத்திலும் நாம் தெருக்களுக்கு வெளியே வரக்கூடாது. சமூக விலகலை கடைப்பிடிப்பது என்பது மிக முக்கியமான விஷயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருமாவளவன், “பிரதமர் மோடியின் உரை பெருத்த ஏமாற்றத்தையே அளித்துள்ளது. கொரோனா எதிர்ப்பில் ஒற்றுமையை காட்டுவதற்காக ஒருமுறை ' கைதட்ட' சொன்னதே போதுமானது. அதுவே வேடிக்கை விளையாட்டாக அமைந்தது. மீண்டும் இது கேலிக்கூத்தாக உள்ளது. கொரோனாவின் பெயரால் குடிமக்களை குட்டிக்கரணம் போடச்சொல்லி 'குரங்காட்டம்' நடத்துகிறார்,” என்று கறாராக விமர்சித்துள்ளார்.