This Article is From Apr 18, 2020

“கொரோனா ஆபத்து… கேரளாவைப் பாருங்க...”- எடப்பாடிக்கு திருமாவின் அடுக்கடுக்கான கேள்விகள்!

"ஆர்டிபிசிஆர்- பரிசோதனைகள் மூலமாக மட்டுமே கொரோனா தொற்றைத் துல்லியமாக உறுதிப்படுத்த முடியும்."

Advertisement
தமிழ்நாடு Written by

"தமிழ்நாட்டிலோ செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே உள்ளது"

Highlights

  • தமிழகத்தில் செய்யும் கொரோனா சோதனைகள் குறைவு: திருமா
  • சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பரவத் தொடங்கியுள்ளது: திருமா
  • தமிழக அரசு வெளிப்படையாக கொரோனா குறித்து தகவல் சொல்ல வேண்டும்: திருமா

இரண்டு நாட்களுக்கு முன்னர், மாவட்ட அளவில் கொரோனா குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி ஆட்சியர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் இருக்காது எனவும், இன்னும் சில நாட்களில் ஜீரோ ஆகும் எனவும், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர், ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என்றும் கூறினார். முதல்வரின் இந்த செய்தியாளர்கள் சந்திப்பு சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு பற்றி கேள்வியெழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

இது குறித்து திருமா, ‘தமிழகத்தில் கொரோனா ஆபத்து ஓரிரு நாட்களில் குறைந்துவிடும் என்று நமது முதல் அமைச்சர் கூறியிருப்பது வியப்பளிக்கிறது. கொரோனா தொற்றின் ஆபத்தைக் குறைத்து மதிப்பிடுகிறாரா முதல்வர்? என்ற கேள்வி எழுகிறது.

கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு முழுஅடைப்பு மட்டுமே ஒரே வழியாக இருக்காது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். சமூகப்பரவலை ஒத்திப் போடுவதற்கு மட்டுமே இந்த முழு அடைப்பு உதவும். பரவலாகப் பரிசோதனை செய்து கொரோனா தொற்று இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களைத் தனிமைப்படுத்திச் சிகிச்சை அளிப்பதன் மூலமே இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

Advertisement

அருகாமையில் உள்ள கேரள மாநிலத்தில் அப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலோ செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே உள்ளது. அதற்கான உபகரணங்கள் கையிருப்பு உள்ளதா என்பதைப் பற்றி வெளிப்படையான விவரங்களைத் தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. சுகாதாரத்துறை செயலாளர் 14000 பரிசோதனைக் (ஆர்டிபிசிஆர்) கருவிகள் இருப்பதாக சொன்னார். ஒரு நாள் கழித்து தலைமைச்செயலாளர் 24 ஆயிரம் சோதனைக் கருவிகள் இருப்பதாகச் சொன்னார். அதற்கும் அடுத்தநாள் சுகாதாரத்துறை அமைச்சர் 1,35,000 கருவிகளுக்காக ஜனவரி மாதத்திலேயே ஆர்டர் செய்திருப்பதாகவும் தற்போது 60,000 கருவிகள் கையிருப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இவை எல்லாமே ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளன.

ஆர்டிபிசிஆர்- பரிசோதனைகள் மூலமாக மட்டுமே கொரோனா தொற்றைத் துல்லியமாக உறுதிப்படுத்த முடியும். ஒரு கருவியை (கிட்) ஒரு முறை தான் பயன்படுத்த முடியும். தமிழ்நாட்டில் இதுவரை 17 மையங்கள் ம்டுமே ஆர்டிபிசிஆர் சோதனை மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு மையத்தில் நாளொன்றுக்கு பரிசோதனைகள் அதிகபட்சமாக 250 இலிருந்து 300 வரைதான் செய்ய முடியுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால் நாள் ஒன்றுக்கு 17 மையங்களிலும் சுமார் 5000 சாம்பிள்கள் மட்டுமே சோதிக்க முடியும். இந்நிலையில் ஒரு மையத்தில் எத்தனை மாதிரிகள் (சாம்பிள்கள்) வந்துள்ளன. அதில் எவ்வளவு சோதிக்கப்பட்டு உள்ளன, எவ்வளவு கிடப்பில் உள்ளன என்ற விவரத்தைத் தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. இதனால் அவர்கள் வெளியிடுகிற புள்ளிவிவரங்கள் மக்கள் நம்பக்கூடியவையாக இல்லை.

Advertisement

நமது மாநிலத்தில் ‘ரெட் ஸ்பாட்' என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்தி அங்கே பரவலாக விரைவு சோதனை முறைகள் (ராபிட் டெஸ்டிங்) மூலமாக சோதிக்க வேண்டும். அவற்றில், ' பாசிட்டிவ் ' என நோய்த் தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு 'ஆர்டிபிசிஆர்' மூலமாக பரிசோதனை செய்யப்பட வேண்டும். இதுதான் கொரோனா தொற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான ஒரேவழியாகும் என மருத்துவ வல்லுனர்கள் கூறி வருகின்றனர். இந்த வழியை இதுவரை தமிழக அரசு கடைபிடித்ததாகத் தெரியவில்லை.

தற்போது மருத்துவர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கும் இந்த தொற்றுப் பரவ ஆரம்பித்துள்ளது. அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. 8 மணி நேரம் வேலை செய்யும் ஒரு மருத்துவருக்கு இரண்டு முறை 'பிபிஇ கிட்' எனப்படும் பாதுகாப்பு கவசங்கள் கொடுக்கப்படவேண்டும். அப்படிப்பார்த்தால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நாளொன்றுக்கு எவ்வளவு 'பிபிஇ கிட்' தேவை; அதில் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது; அதுதவிர எவ்வளவு கையிருப்பில் உள்ளது என்ற விவரங்களைத் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். 'பிபிஇ கிட்' போதுமான அளவு வழங்கப்படவில்லை என்பதே மருத்துவர்களும், பயிற்சி மருத்துவர்களும், செவிலியர்களும், துப்புரவுப் பணியாளர்களும் தற்போது கூறுகிற புகாராக உள்ளது. இந்த நிலையில், 'சிறப்பாக செயல்படுகிறோம்' என்று வார்த்தைகளை வைத்து மக்களை குழப்பும் வேலையில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பது வேதனை அளிக்கிறது.

Advertisement

முழுஅடைப்பை வரம்பின்றி நீட்டிக்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால், போதிய தடுப்பு மற்றும் சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகள் இல்லாமலேயே நோய் குறைந்து விட்டது என்று பொய்யான ஒரு சித்தரிப்பை ஏற்படுத்துவது தமிழக மக்களை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் தள்ளிவிடும்.

எனவே, முதலமைச்சர் அவர்கள் மருத்துவர்கள், உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்து, தமிழக மக்களை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விசிக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்' என்று அறிக்கை மூலம் கருத்து தெரிவித்துள்ளார். 

Advertisement


 

Advertisement