This Article is From Dec 28, 2019

“பதவிக்காகவா..?”- ராணுவத் தளபதியின் சர்ச்சை பேச்சு; கொதிக்கும் திருமா!

Thol.Thirumavalavan - "இராணுவத் துறையில் அரசியல் தலையீடு இருக்குமோ என்னும் அய்யத்தை எழுப்புகிறது"

Advertisement
இந்தியா Written by

Thol.Thirumavalavan - 'அவரது பேச்சு பதவிக்காக எதிர்க்கட்சிகளைச்சாடுகிறாரோ என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறது.'

இந்திய அளவில் நடக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பற்றி இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் (Indian Army Chief Bipin Rawat), சில நாட்களுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ராணுவத் தளபதியாக இருக்கும் ஒருவர், அரசியல் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்கிற மரபை அவர் மீறிவிட்டார் என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவன் (Thol.Thirumavalavan), தளபதி ராவத் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். 

“தலைமை என்பது தலைமை தாங்கி வழி நடத்துவது ஆகும். நீங்கள் முன்னோக்கி நகர்ந்தால், அனைவரும் முன்னோக்கி நகர்வார்கள். மக்களை சரியான பாதையில் வழிநடத்துபவர்களே தலைவர்கள். மக்களை தவறாக வழி நடத்துவோர் தலைவர் அல்ல. பல பல்கலைக்கழங்களிலும் கல்லூரிகளிலும் அதுதான் நடந்து வருகிறது. நம் நாட்டின் நகரங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட தலைவர்கள் வழிநடத்துவது சரியல்ல. அது தலைமைப் பொறுப்புக்கு அழகல்ல,” என்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பேசியுள்ளார் தளபதி ராவத். 

இதற்கு திருமாவளவன், “இந்தியாவில் இதுவரையில் இப்படி எந்த இராணுவத் தளபதிகளும் அரசியல் பேசியதில்லை. தற்போது இராணுவத் தளபதி பிபின் ராவத் அவர்கள் வெளிப்படையாக அரசியல் பேசியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது. இராணுவத் துறையில் அரசியல் தலையீடு இருக்குமோ என்னும் அய்யத்தை எழுப்புகிறது. அத்துடன், இனிவருங்காலங்களில் அரசியலிலும் அரசிலும் இராணுவத்தின் தலையீடும் இருக்குமோ என்கிற அச்சத்தையும் உண்டாக்குகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவையில் தீர்மானித்தபடி புதிதாக உருவாக்கப்பட்ட முப்படைகளுக்குமான தலைமை தளபதி பொறுப்பில் பிபின் ராவத் அவர்கள் நியமிக்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், அவரது பேச்சு பதவிக்காக எதிர்க்கட்சிகளைச்சாடுகிறாரோ என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

Advertisement

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜனநாயகத்தின் அடிப்படையில் நடைபெற்ற மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் உயர் அதிகாரியான இராணுவத் தலைமை தளபதி பேசி அரசியலில் தலையிட்டிருப்பது சீருடை பணியாளர்களுக்கான விதிகளையும் மரபுகளையும் மீறும் செயலாகும். ஆகவே, இராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் மீது அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்,” என்று காட்டமாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 


 

Advertisement
Advertisement