"தற்போது மரண நோயின் பீதியிலிருந்தும் பட்டினிச் சாவிலிருந்தும் மீள்வதற்கு ஒரு வழியும் சொல்லவில்லை"
ஹைலைட்ஸ்
- பிரதமர் மோடி, நேற்றிரவு 8 மணி அளவில் உரையாற்றினார்
- அப்போது அவர், பல்வேறு திட்டங்கள் குறித்துப் பேசினார்
- பிரதமரின் உரைக்குத்தான் திருமா விமர்சனம் முன்வைத்துள்ளார்
இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, நிவாரணப் பணிகள், பொது முடக்கம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு உரையாற்றினார்.
அப்போது, கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை சரி செய்வதற்காக ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
அவர் மேலும், கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இழப்பை சரி செய்ய பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவிக்க உள்ளேன். 'ஆத்மனிர்பார் பாரத் அபியான்' என்ற இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ. 20 லட்சம் கோடி வரையில் ஒதுக்கப்படும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும் என்று கூறினார்.
இந்நிலையில் பிரதமர் உரை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “பிரதமர் மோடி சொற்சிலம்பம் ஆடுவதில் சூரப்புலி. ரூ.20 இலட்சம் கோடி திட்டம். மயக்கு மொழி பேசுவதில் மோடிக்கு நிகர் மோடிதான். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியோ உடனடி நிவாரணம் பற்றியோ புலம்பெயர் தொழிலாளர் பற்றியோ ஏதுமில்லை. தற்போதைக்கு ஒன்றுமில்லை.
கொரோனா தடுப்பும் பொருளாதார மீட்பும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டியவை. ஆனால், பிரதமர் 'தற்சார்பு இந்தியாவுக்கான' கனவுத் திட்டத்தையே அறிவித்துள்ளார். தற்போது மரண நோயின் பீதியிலிருந்தும் பட்டினிச் சாவிலிருந்தும் மீள்வதற்கு ஒரு வழியும் சொல்லவில்லை. வழக்கமான ஏமாற்றம்” என்று வருத்தத்துடன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.