திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு அதிமுக வெற்றிபெறும்: துணை முதல்வர் ஓபிஎஸ்
Tirunelveli, Tamil Nadu: திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அஇஅதிமுக வெற்றிபெறும் என்றும் தங்களது அரசை அகற்ற நினைக்கும் எதிரணியினர் இடைத்தேர்தலோடு காணாமல் போய்விடுவார்கள் என்றும் தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 303வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவல் வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 303வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவல் வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் "தினகரன் பகலில் அண்ணாந்து வானத்தைப் பார்த்துக்கொண்டு பகற்கனவு காண்கிறார். அவர் இதுவரை ஒருவார்த்தை கூட உண்மை பேசியதாக தமிழக மக்கள் நினைக்கவில்லை. இடைத்தேர்தலோடு தினகரன் அணி காணாமல் போய்விடும்" என்று தெரிவித்தார்.
மேலும் "மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பூலித்தேவனின் பிறந்தநாள் அரசுவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். அதிமுக அரசு எப்போதுமே சுதந்திரப்போராட்ட வீரர்களை கவனத்தில் கொள்ளும் அரசு" என்று பூலித்தேவனின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தபின் பன்னீர்செல்வம் கூறினார்.
நெற்கட்டும்செவல் ஏற்கனவே சுற்றுலாமையமாக அறிவிக்கப்பட்டு 50 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு பூலித்தேவனின் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் காட்சிப்பொருள்கள் வைத்துப் போற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் சீனிவாசன், வி.எம். ராஜலக்ஷ்மி ஆகிய அமைச்சர்கள் நிகழ்ச்சியில் பங்குகொண்டு பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதனிடையே அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அவர்களும் பூலித்தேவன் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம், "நாடு விடுதலை பெற சுதந்திரப் போராட்ட வீரர்கள் எத்தனையோ இன்னல்களைத் தாங்கினார்கள். ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசை நடத்துபவர்களோ தாங்கள் சொத்துக்குவிப்பதற்காக மக்கள்நலனை அடகுவைத்துவிட்டார்கள். இந்த அரசு மத்திய பாஜ அரசின் அடிமை அரசாக உள்ளது. ஆகவே இந்த அரசு அதிகாரத்திலிருந்து அகற்றப்படவேண்டும்" என்று கூறினார்.
ஆகஸ்ட் 2 அன்று திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே. போஸ் மறைந்ததை அடுத்தும் ஆகஸ்ட் 7 அன்று திமுக தலைவர் மு. கருணாநிதி மறைந்ததை அடுத்தும் அத்தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது.