பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர்ராவ், “தமிழகத்தில் பாஜகவை எதிர்ப்பவர்கள் இந்துக்களின் கடவுளான முருகனுக்கு எதிரானவர்கள்!” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தில் ‘கறுப்பர் கூட்டம்' யூடியூப் சேனல் வெளியிட்டிருந்த ‘கந்தசஷ்டி' குறித்தான வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து ‘கறுப்பர் கூட்டம்' யூடியூப் சேனல் முடக்கப்பட்டது. அந்த சேனலின் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, முருகனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த பாஜக, ‘வேல் பூஜை' என்கிற புதுவிதமான பூஜையை நடத்தியது. இந்நிலையில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர்ராவ், “தமிழகத்தில் பாஜகவை எதிர்ப்பவர்கள் இந்துக்களின் கடவுளான முருகனுக்கு எதிரானவர்கள்!” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் கட்சிகள் அடுத்தடுத்து, அரசியல் மூவ்களை செய்து வருகின்றன. குறிப்பாக இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பின்னர் பேட்டியளித்த அண்ணாமலை “பாஜகவில் நான் எந்த வித எதிர்பார்ப்பும் கோரிக்கைகளையும் வைக்காமல்தான் இணைந்துள்ளேன். கட்சிக்கு முழுமையாக கட்டுப்பட்டு நான் நடந்து கொள்வேன். தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். நான் இனி பாஜகவின் அடிப்படைத் தொண்டன்” என்றார்.
அவர் மேலும் தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசும்போது, “தமிழகத்தில் திராவிடக் கட்சி அரசியல் என்பது ஒரு குடும்பத்தின் அரசியலாக மாறிவிட்டது. அங்கு பாஜக போன்ற தேசியக் கட்சியின் வளர்ச்சி அவசியமாக உள்ளது. நான் பாஜகவில் இணைவதற்கு முன்னரே, பிரதமர் நரேந்திர மோடிஜியின் தலைமைப் பண்பை பாராட்டிப் பேசியுள்ளேன். இனி என்னுடைய பணி என்பது, கட்சியை தமிழகத்தில் வளர்ப்பதற்குப் பாடுபடுவதுதான்” என முடித்துக் கொண்டார்.