இந்த விவகாரம் குறித்து பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்த ஐ.ஜி ஸ்ரீஜித் நிருபர்களிடம் பேசினார்.
ஹைலைட்ஸ்
- சட்டம் சொல்வதைத் தான் செய்வேன், ஐ.ஜி
- போராட்டக்காரர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், ஐ.ஜி
- தலைமை அர்ச்சகர், கோயிலின் பூஜைகளை நிறுத்தி விடுவதாக மிரட்டியுள்ளார்
Sabarimala, Kerala: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 2 பெண்கள், 300 போலீஸ் பாதுகாப்புடன் இன்று நுழைய இருந்தனர். அவர்கள் கோயிலுக்கு மிக அருகில் சென்ற போது, போராட்டக்காரர்கள் பெரும் அளவு கூடி, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரண்டு பெண்களும் சபரிமலையிலிருந்து கீழே இறங்கும் நிலை ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்த ஐ.ஜி ஸ்ரீஜித் நிருபர்களிடம் பேசினார்.
ஐ.ஜி, ‘சட்டம் என்ன சொல்கிறதோ, அதைத் தான் நான் செய்வேன். அந்தப் பெண்களுக்கு இங்கே இருக்கவும், கோயிலுக்குள் செல்லவும் அனைத்து உரிமைகளும் இருக்கிறது. அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்லாமல் நான் திரும்பப் போவதில்லை. இங்கு கூடியிருக்கும் ஐயப்ப பக்தர்கள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நானும் ஒரு ஐயப்ப பக்தன் என்பதை சொல்லிக் கொள்கிறேன்' என்று கொதிப்புடன் கூறினார்.
ஆனால், ஒரு கட்டத்தில் பெண்கள் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை நீடித்தது. இதனால், அவர்களை மீண்டும் கீழே அழைத்துச் செல்வதைத் தவிர காவல் துறையினருக்கும் வேறு வழியில்லாமல் போனது.
பெண்களை கோயிலுக்கு உள்ளே விடுவது குறித்து கோயிலின் தலைமை அர்ச்சகர் கண்டராரு ராஜீவாரு, 'நாங்கள் கோயிலை மூடிவிட்டு, அதன் சாவியை சமர்பிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். எங்களுக்கு அதைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் பக்தர்களுக்கு ஆதரவாக இருக்க முடிவெடுத்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 28 ஆம் தேதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 10 முதல் 50 வயதுக்கு இடையில் இருக்கும் பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நுழையக் கூடாது என்றிருந்த நடைமுறைக்கு முடிவுகட்டித் தீர்ப்பளித்தது.