This Article is From Aug 13, 2020

ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்!

கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அவர் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாத காரணத்தினால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்

Advertisement
தமிழ்நாடு Written by

திமுக ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்லம் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்திக்க சமீபத்தில் டெல்லி சென்றிருந்தார். இந்நிலையில் அவர் பாஜகவில் இணைவதாக பல தகவல்கள் வெளியாகியிருந்தன.

நட்டாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த செல்வம் தான் பாஜகவில் இணையவில்லை என்றும், அதேபோல தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தியவர்களை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும், பாரதத்தில் நல்லதொரு ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியுடனான தொடர்பை திமுக துண்டிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

கட்சி தலைமைக்கு தகவல் அளிக்காமல் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தது குறித்து தங்களது கட்சி தலைமை தங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நடவடிக்கை எடுத்தால் அதை சந்திக்க தான் தயாராக இருப்பதாக” செல்வம் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கு.க. செல்வம் சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்று, பாஜக தலைவர்களை சந்தித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், “தன்னுடன் இருப்பவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறியிருந்தார்

Advertisement

இந்நிலையில், திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க. செல்வம் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார் என திமுக சமீபத்தில் அறிவித்திருந்தது.. இதனைத் தொடர்ந்து, செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கையை திமுக எடுத்திருந்தது. அவரை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதாகவும், நிரந்தரமாக ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் திமுக அறிக்கை வெளியாகியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது, “திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அவர் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாத காரணத்தினால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்.” என திமுக அறிக்கை விடுத்துள்ளது.

Advertisement