This Article is From Oct 03, 2018

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது!

தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது

இன்று அதிகாலை விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர்

ஹைலைட்ஸ்

  • காசியாபாத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
  • டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட உடன் விவசாயிகள் போராட்டத்தை முடித்தனர்
  • நேற்று போலீஸுக்கும் விவசாயிகளுக்கும் மோதல் உண்டானது
New Delhi:

தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று அதிகாலை விவசாயிகள் நகருக்குள் நுழைவது அனுமதிக்கப்பட்டவுடன், போராட்டம் முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காசியாபாத்தில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

‘கிசான் கிராந்தி பாதயாத்ரா’-வின் ஒரு பகுதியாக பல்வேறு மாநில விவசாயிகள், நேற்று டெல்லிக்குள் நுழைய முயன்றனர். ஆனால், அவர்களுக்கு நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படவே, வன்முறை வெடித்தது. விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது, மானிய விலையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் வழங்குவது, 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது, சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்டக் கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கிசான் கிராந்தி பாதயாத்ரா, கடந்த செப்டம்பர் 23-ல் ஹரித்வாராவில் தொடங்கியது. உத்தர பிரதேசத்தின் கோண்டா, பஸ்தி, கோராக்பூர், மேற்கு உ.பி ஆகிய இடங்களில் பாதயாத்ரா முடிந்து நேற்று டெல்லியை அடைந்தது. 

இந்நிலையில் இன்று அதிகாலை டெல்லி - உத்தர பிரதேச எல்லையிலிருந்த தடுப்புகளை போலீஸ் அகற்றியது. இதையடுத்து விவசாயிகள் 400 டிராக்டர்களில் கிசான்கட்டுக்கு வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல ஆரம்பித்தனர். 

போராட்டம் நிறைவடைந்தது குறித்து பாரதிய கிசான் யூனியனின் செய்தித் தொடர்பாளர், ராகேஷ் டிகாய்ட், ‘எங்கள் தரப்பிலிருந்து பல கோரிக்கைகளை வைத்தோம். நாங்கள் அடுத்த 5 அல்லது 6 நாட்களில் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். பல விவசாயிகள் அவர்களது வீடுகளை விட்டு வந்து 10 முதல் 16 நாட்கள் ஆகின்றன. எனவே, தற்போதைக்கு அவர்களை சொந்த ஊருக்கு அனுப்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

.