This Article is From Oct 15, 2019

Japan-ஐ சூரையாடிய வரலாறு காணாத புயல்... 35 பேர் பலி... மீட்புப் பணியில் 1,00,000 வீரர்கள்!

வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 31,000 துருப்புகள் உட்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Japan-ஐ சூரையாடிய வரலாறு காணாத புயல்... 35 பேர் பலி... மீட்புப் பணியில் 1,00,000 வீரர்கள்!

புயலின்போது 216 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், இந்த ஹகிபிஸ் புயலானது, பல ஆண்டுகளுக்குப் பின் தாக்கிய மிக வலுவான புயல் எனக் கூறப்படுகிறது.

Tokyo:

ஹகிபிஸ் புயல் நேற்று காலை ஜப்பான் நிலப்பகுதியைக் கடந்து சென்றது. இந்தப் புயலால், ஜப்பானில் 60 ஆண்டுகள் இல்லாத அளவு கடும் மழை பெய்துள்ளது. இதனால், பெரும் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்தப் புயல், தலைநகர் டோக்கியோவை தவிர்த்து, அதனைச் சுற்றியுள்ள நகரங்களில் பெரும்  சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் பல இடங்களில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டது. வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 31,000 துருப்புகள் உட்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஹகிபிஸ் புயலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14  என்றும், 11 பேரை காணவில்லை எனும் ஜப்பான் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதியில் உள்ள ஊடகங்கள் “குறைந்த பட்சம் 35-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், 11 பேருக்கு மேற்பட்டோர் கிடைக்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளன.

சிகுமா நதி நிரம்பி, மத்திய ஜப்பானின் நகானோ உட்பட 12 பகுதிகளில் கரையைக் கடந்து ஓடிய வெள்ளத்தால், அப்பகுதிகளில் உள்ள வீடுகளின் இரண்டாவது மாடி வரை நீரில் மூழ்கியது.

அப்பகுதியில், வீடுகளின் கூறையின் மேல் உயிருக்காக போராடியவர்களை ராணுவ வீரர்களும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்டனர். இருப்பினும், ஃபுகுஷிமாவில் மீட்பு பணியின்போது, பெண் ஒருவர் ஹெலிகாப்டரிலிருந்து கீழே விழுந்து பலியானார்.

புயலின்போது 216 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், இந்த ஹகிபிஸ் புயலானது, பல ஆண்டுகளுக்குப் பின் தாக்கிய மிக வலுவான புயல் எனக் கூறப்படுகிறது. இந்தப் புயல், ஜப்பானில் உள்ள ஹோன்ஷு தீவை முழுமையாக புரட்டிப்போட்டுள்ளது.

சனிக்கிழமை ஏற்பட்ட இந்த இயற்கைச் சீற்றம், ஒரே இரவில் பல உயிர்ச் சேதங்களையும், பொருட்ச் சேதங்களையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றது.

இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, “அரசு தன்னால் முடிந்தவரை கடமையைச் செய்யும்.  அதேபோல் பேரிடர் மீட்பு நிர்வாகம், தங்களால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட வேண்டும்” என அவசர கூட்டத்தின்போது கேட்டுக்கொண்டார்.

.