ஹைலைட்ஸ்
- இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது
- அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது
- இதையொட்டி, பிரதமர் மோடி நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்
New Delhi:
பிரதமர் நரேந்திர மோடி உயிருக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு ஆபத்து இருப்பதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்த்ல நடக்கப் போகிறது. இதற்கு பாஜக சார்பில் பிரசாரம் செய்வதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றுவார். இதையொட்டி, பிரதமர் தரப்பிலும் நிறைய பொது நிகழ்ச்சிகளுக்கு வரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறன்றன. குறிப்பாக, சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மோடிக்கு அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தான், மத்திய உள்துறை அமைச்சகம், ‘பிரதமர் மோடி உயிருக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு ஆபத்து நிலவி வருகிறது’ என்று தெரிவித்துள்ளதாக தகவல்.
இது குறித்து உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் மிக முக்கிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாம். இதையொட்டி, பிரதமர் மோடிக்கு அருகாமையில் எந்த தனி நபரும் போகக் கூடாது. அமைச்சராக இருந்தாலும் பிரதமரின் எஸ்.பி.ஜி படை சோதனைக்குப் பின்னர் தான் பிரதமருக்கு அருகில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். சாலை வழியாக பிரதமர் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் கவனம் இருத்தல் வேண்டும் எனவும் பிரதமரைச் சுற்றியுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர், ‘ராஜீவ் காந்தி கொலை போல்’ பிரதமரைக் கொல்ல சதி திட்டங்கள் இருப்பதாக புனே போலீஸ் கூறியது. மேலும், இது தொடர்பாக மாவோயிஸ்ட் என்று சந்தேகிக்கப்படும் நபரிடமிருந்து ஒரு கடிதத்தையும் புனே போலீஸ் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.