இடைத் தேர்தல் முடிவுகள் நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும்.
ஹைலைட்ஸ்
- 3 லோக் சபா, 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல்
- காங்., - மஜத கூட்டணி இடைத் தேர்தல் தொடர்கிறது
- தேர்தல் முடிவுகள் வரும் 6 ஆம் தேதி வெளியாகும்
New Delhi: கர்நாடக மாநிலத்தில் இன்று 3 லோக்சபா தொகுதிகளுக்கும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடக்கிறது. சமீபத்தில் கூட்டணி அமைத்து ஆட்சி அரியணையில் ஏறிய காங்கிஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் இந்தத் தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
மஜத, மந்தியா மற்றும் சிவலிங்கா லோக்சபா தொகுதிகளிலும், ராமநகரா சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ், பல்லாரி லோக்சபா தொகுதிகயிலும், ஜம்காந்தி சட்டமன்ற தொகுதியிலும் போட்டி போடுகிறது.
ராமநகரா தொகுதியைப் பொறுத்தவரையில், பாஜக சார்பில் போட்டியிட இருந்த சந்திரசேகர், அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அதனால் அந்தத் தொகுதியில் மஜத சார்பில் போட்டியிடும் மாநில முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமிக்கு வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் குமாரசாமி, சென்ற சட்டமன்ற தேர்தலில் சன்னபட்னா மற்றும் ராமநகரா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெறவே, ராமநகரா தொகுதி பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் உருவானது.
சிவமுகா லோக்சபா தொகுதியில் எடியூரப்பா உறுப்பினராக இருந்தார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் அந்தத் தொகுதியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அங்கும் இடைத் தேர்தல் நடத்த வேண்டியதாயிற்று. மற்ற இடங்களிலும் தொகுதிகள் திடீரென்று காலியனதால் இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
ஜம்காந்தி சட்டப்பேரவை தொகுதியைப் பொறுத்தவரையில், அதன் உறுப்பினரான ஆனந்த் நாயம்கவுடா சில மாதங்களுக்கு முன்னர் விபத்தில் இறந்துவிட்டார். அதனால் அங்கும் இடைத் தேர்தல் நடத்தும் சூழல் உருவானது.
இடைத் தேர்தல் முடிவுகள் நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும். இடைத் தேர்தலின் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் - மஜத கூட்டணியின் ஸ்திரத்தன்மை தேர்தல் மூலம் வெளிவரும் என்று தெரிகிறது.