This Article is From Nov 13, 2018

தூக்குதண்டனை கொடுத்தால் தான் பாலியல் வன்கொடுமையை தடுக்கமுடியும்: விஜயகாந்த்

தூக்குதண்டனை கொடுத்தால் தான் பாலியல் வன்கொடுமையை தடுக்கமுடியும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தூக்குதண்டனை கொடுத்தால் தான் பாலியல் வன்கொடுமையை தடுக்கமுடியும்: விஜயகாந்த்

தருமபுரி மாவட்டத்தில் அரூர் அருகே உள்ள சிட்லிங் மலைக்கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, மலம்கழிக்க காட்டுப்பகுதிக்குச் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லப்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளான சதீஷ் (வயது22), ரமேஷ் (22) ஆகியோரை தேடி வந்தனர்.

இவர்களில் ஏற்காட்டில் பதுங்கி இருந்த சதீஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தேடப்பட்டு வந்த மற்றொரு நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்துள்ளார்.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தருமபுரி மாவட்டம், சிட்லிங் மலைக்கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், கடந்தவாரம் சேலம் மாவட்டத்திலும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்படிருப்பதையும் தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு உச்சபட்ச தண்டனையான தூக்குதண்டனை கொடுத்தால் தான், இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காவண்ணம் தடுக்கமுடியும்.

எனவே ஆட்சியாளர்களும், நீதித்துறையினரும் இதை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


 

.